பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
31

New Page 1

    பொ-ரை : ‘நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்,’ என்கிறார்.

    வி-கு : ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக. ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க. படித்தல் - கற்றல். அன்றிக்கே, ‘திருநாமம் படிமின் - கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம். ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ? அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன, ‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது; அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது; ஆன பின்பு, அவன்தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.

    குணம் கொள் - குணங்களைக் கொண்டிருப்பாராய்; குணங்களால் மிக்கு இருப்பாராய். என்றது, ‘நிறைந்த குணப் பிரசித்தியையுடையவர்கள்’ என்றபடி. நிறைபுகழ் - நிறைந்த புகழையுடையராய். இப்படி இருந்தார்களே ஆகிலும், அடையத்தக்கவர் அல்லராகில் உபேக்ஷிப்பர்கள்; ஆதலின், ‘மன்னர்’ என்கிறார். என்றது, ‘முடி சூடிய அரச வமிசத்தில் பிறந்த அரசர்கள்’ என்றபடி. அடையத்தக்கவராகிலும் உலோபிகளாய் இருப்பர்களே ஆகில் கிட்டுவார் இலரே? ஆதலின், ‘கொடைக்கடன் பூண்டு இருந்து’ என்கிறார். என்றது, ‘கொடுக்கையே இயற்கையாக உள்ளவர்கள்’ என்றபடி. தர்மம் செய்தலையே இயற்கையாய் உள்ளவர்களாகிலும், தங்களது

_____________________________________________________

1. பின் மூன்று அடிகளையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.