பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
320

பார்த்திருப்பார் பலர் உளர் ஆனால், அவர்களிலே 1சிலவர் இவனோடே கைசெய்து, அவனுக்குள்ள 2உடலையும் தாங்கள் கண்டபடி அழித்து நீக்கியுள்ள உடலையும் கூறிட்டு, தாங்களே கொண்டுவிட்டால், மற்றுள்ளார் கதகத எனச் சொல்ல வேண்டா அன்றோ? 3இவர்கள்தாம் நுனியாடிகள் அலரோ? 4இப்படி இவர்கள் தாமேயாவது என், நாம் இருக்க?’ என்று திவ்விய ஆயுதங்கள் கிளர்ந்தன ஆயிற்று. மணி நீல வளர் ஒளியான் - நீலமணி போலே வளராநின்றுள்ள ஒளியையுடையவன். கை மேலே 5இலக்கைப் பெறாதார்க்கு நாடோறும் படி விட வேண்டுமே அன்றோ? படி விடாத போது அரைக்கணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?

_____________________________________________________

1. ‘அழுதனர் சிலவர்; முன்னின் றார்த்தனர் சிலவர்; அண்மித்
  தொழுதனர் சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி
  முழுதுற விழுங்கு வார்போல் மொய்த்தனர் சிலவர்; சுற்றும்
  தழுவினர் சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர் தாங்கி.’

  என்பது கம்பராமாயணம், திருவடி தொழுத பட. 4.

2. உடல் - செல்வமும், சரீரமும். கண்டபடி - கண்ட பிரகாரம். ‘கிழித்து’
  என்பதற்கு ‘அழித்து’ என்பதும், ‘இரண்டு கூறாக்குதல்’ என்பதும் பொருள்.
  ‘கூறிட்டு’ என்பதற்குக் ‘கண்டித்து’ என்பதும், ‘கூறு செய்து’ என்பதும்
  பொருள். ‘தாங்களே’ என்றது, நகங்களை. ‘மற்றுள்ளார்’ என்றது,
  திருவாழியாழ்வான் தொடக்கமானாரை. கதகத என - ‘கோபிக்க’ என்பதும்,
  ‘ஒளிசெய்ய’ என்பதும் பொருள்.

3. ‘இவர்கள் சீறுதற்குக் காரணம் என்?’ என்ன, ‘இவர்கள் தாம்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘நுனியாடிகள்’ என்றது,
  சிலேடை: ‘கையின் முன்னிடத்திலிருப்பவர்’ என்பதும், ‘சேனையின்
  முன்னிடத்திலிருப்பவர்’ என்பதும் பொருள்.

4. ‘கிளர்’ என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.
  ‘தாமேயாவது என்?’ என்றது, ‘நாங்கள்தாமே கூறிட்டுக்கொள்கிறபடி எப்படி?’
  என்றபடி.

5. இலக்கு - மாத ஜீவனமான பணமும், இலட்சியமும். படி - அரிசிப் படியும்,
  திருமேனியும், என்றது, ‘கைமேலே இருந்து வைத்து இலட்சியம்
  பெறாதார்க்குச் சந்தோஷத்தையுண்டாக்குவதற்காகத் திருமேனியைக் கொடுக்க
  வேணுமேயன்றோ?’ என்றபடி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளைக்
  காட்டுவதற்கு மேற்கோள், ‘படி கண்டறிதியே’ என்பது, முதல் திருவந். 85.