பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
324

1அவ

1அவ்விருவர் விடாயும் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, இரண்டும் ஒருகாலே பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.

    தெளிவு அரிய சிவன் பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் - பாரதப்போரை முடிய 2நடத்தினமை காண்கையாலே, தாங்கள் பிறரால் அறியப்படமாட்டாதவர்களாக நினைத்திருப்பாருமாய்ப் பூமியில் கால்பாவாமையால் வந்த செருக்கினையுடையருமான சிவன் தொடக்கமானார் செருக்கு அற்றவர்களாய்க்கொண்டு வந்து விழுந்து ஏத்தும்படியான பரந்த புகழையுடையவன். 3ஒரு கொசுகுத்திரள் இருந்தது என்னா, திருப்பாற்கடலில் ஒரு மூலை சுவறாதே அன்றோ? அப்படியே, இவர்கள் ஏத்தா நின்றால் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சும்படியான புகழையுடையவனாதலின், ‘விரிபுகழான்’ என்கிறது. ‘கவராத மேகலையால் குறை இலமே - அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என் செய்ய? அன்றிக்கே, 4‘உடைமாறாத பரிவட்டங்கொண்டு காரியம் என்?’ என்னுதல். அன்றிக்கே, ‘பாதுகாப்பவனாய்த் தான் வந்து புகழ் படைத்துப் போருகிறவன், ‘இத்தலையைப் பாதுகாப்பதனால் வரும் புகழ் வேண்டா; அது தவிர்ந்தால் வரும் பழி வர அமையும்,’ என்று இருந்தானாகில், நான் எனக்குப் பழியாம்படி 5பரிவட்டம் பேணி இருக்கவோ?’ என்னுதல்.

    6இனி, வரிவளையால் குறையிலமே - வாயாடி. வாய்க்கரைப் பற்றை அடுத்தூணாகவுடையவன். எதிரிகள்

_____________________________________________________

1. மேலே கூறிய பொருளை, பிரகரணத்தோடே சேர்த்துக் காட்டுகிறார்,
  ‘அவ்விருவர் விடாயும்’ என்று தொடங்கி. இவள் - ஆண்டாள்.

2. ‘நடத்தினமை காண்கையாலே’ என்பதனைப் பின் வருகின்ற ‘செருக்கு
  அற்றவர்களாய்க்கொண்டு வந்து’ என்பதனோடு கூட்டுக.

3. ‘விரி’ என்றதற்குத் திருஷ்டாந்தத்தோடு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒரு
  கொசுகுத்திரள்’ என்று தொடங்கி. அளவுபட்டு - குறைவுபட்டு.

4. உடை மாறாத - மாறாடி உடுக்காத.

5. பரிவட்டம் பேணி இருக்கவோ - நல்ல புடைவை உடுத்திருக்கவோ?

6. முதல் இரண்டு அடிகட்குச் சிலேடையாக வேறும் ஒரு கருத்து
  அருளிச்செய்கிறார், ‘இனி’ என்று தொடங்கி. வாயாடி - வாசாலகனும்,
  வாயிலே வசிக்கிறவனும். வாய்க்கரைப் பற்று - அதரமும், கடி சீமையும்.
  அடுத்தூணாகவுடையவன் - இலக்கைக்கு விட்ட சீமையாகவுடையவன்.
  இலக்கை - மாதச்சம்பளம், அதரத்தை ஆசந்நஜீவனமாகவுடையவன்.