பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
36

உகந

உகந்து - பலத்தை அநுபவிக்கின்ற என்னது அன்றிக்கே, 1சந்தோஷமும் தன்னதே ஆயிற்று. வந்து-2வருதலும் மாறாடிற்று. தானே இன் அருள்செய்து-3நான் வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன்பேறாகத் திருவருளைச் செய்து. என்னை முற்றவும் தானானான்-4உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்; எனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல். அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான் என்னுதல். “ஆக முற்றும் அகத்து அடக்கி” என்றாரே அன்றோ முன்னரும்.

    5
மீனாய் - உலகில் உள்ள சாதிகட்கு எல்லாம் வேறுபட்டவனான தான், 6ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டுத்

____________________________________________________

1. ‘சந்தோஷமும்’ என்ற உம்மையாலே, கிருஷி தன்னதானது அன்றிக்கே
  என்றபடி.

2. ‘வருதலும் மாறாடிற்று’ என்றது, சந்தோஷம் மாறாடினாற் போலே,
  வருதலும் மாறாடிற்று என்றபடி.

3. ‘நான் வேண்டிக்கொள்ளாது இருக்க’ என்றது, “தானே” என்ற ஏகாரத்தின்
  பொருள். “இன்னருள்” என்றதனை நோக்கித் ‘தன்பேறாக’ என்கிறார்.

4. “என்னை முற்றவும் தானானான்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார். முதற்பொருள், என்னை-என்னோடு, முற்றவும் -
  உள்ளும்புறம்புமான எல்லாவிடத்திலும், தான் ஆனான் - தான் என்னோடு
  கலந்தான் என்பது. இரண்டாவது, என்னை - எனக்கு, முற்றவும் -
  எல்லாவிதமான இனிய பொருள்களும் தானானான் என்பது. மூன்றாவது,
  என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களுமாகக் கொண்டான்
  என்பது. ஈற்றிலே கூறிய பொருளுக்குப் பிரமாணம், “ஆக முற்றும்” என்பது.
  இது, திருவாய்மொழி. 4. 3 : 3.

5. இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு தன்பேறாக விரும்பக் கூடுமோ?
  என்ன, என்னைப் பெறுகைக்குப் பல காலம் எதிர் குழல் புக்குத்
  திரிந்தவதனாதலின், கூடும் என்கிறார் “மீனாய்” என்று தொடங்கி.

6. ‘ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டு’ என்றது, மச்சாவதாரமாகிப்
  பிரஹ்மாவுக்கு வேதத்தை உபதேசித்த தன்மையைத் தெரிவித்தபடி.

  சூழிக் களிறுய்ய வெவ்வாய் முதலை துணித்தஉக்ர
  பாழித் திகிரிப் படைஅரங் கேசர் படைப்பவன்தன்
  ஊழிப் பொழுதொரு சேலாய் ஒருசெலு வுட்கரந்த
  ஆழிப் பெரும்புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே.

  என்றார் திவ்ய கவியும்.