| 464 
464 
    
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
 கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
 ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.
 
 பொ-ரை :- 
கலியுகம் காரணமாக வருகின்ற தோஷங்கள் ஒரு சிறிதும் இன்றிக்கே, 
தன் அடியார்களுக்குத் திருவருள் புரிகின்ற, நிறைந்த மிக்க சுடரையுடைய திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனும் 
மாயப்பிரானும் கண்ணனுமான சர்வேச்வரன் விஷயமாக, வளப்பம் பொருந்திய வயல்களாற் சூழப்பட்ட 
தெற்கேயுள்ள சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த காரிமாறனாகிய ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட 
தழைத்த புகழோடு கூடின ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உள்ளத்திலேயுள்ள 
குற்றங்களை நீக்கும் என்றபடி.
 
 வி-கு :- இன்றிக்கே, அருள்செய்யும் மாயப்பிரான் என்க. கண்ணன் 
தன்னைச் சடகோபன் (சொன்ன) ஆயிரம் என்க. தென்-அழகுமாம்.
 
 ஈடு :- முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு, மற்றைத் 
தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையும், எம்பெருமான் பக்கல் வேறு பிரயோஜனங்களை 
விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.
 
 கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-2“எவனுடைய மனத்தில் கோவிந்தன் 
இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது; எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ 
அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது”
 
______________________________________________________ 
1. 
“உள்ளத்தை மாசு அறுக்கும்” என்றதனை நோக்கி அவதாரிகைஅருளிச்செய்கிறார்.
 
 2. கலி இல்லாமல் போகுமோ? என்ன, ‘எவனுடைய’ என்று தொடங்கி அதற்கு
 விடை அருளிச்செய்கிறார்.
 
 “கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய கிருதே யுகே
 யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய ந அச்யுத:”
 |