பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
72

ஒழுக்கம் உடையவளை” என்கிறபடியே, சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் செல்வத்தாலும் குறைவற்று  இருப்பவர்களான இருவர், அவர்களில் 1‘அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி’ என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய இலக்ஷணங்கள் நாயகனும் உடையவனாய், ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு’ என்பன போன்று சொல்லுகிற நாயகியுடைய இலக்ஷணங்கள் நாயகியும் உடையவளாய், இப்படி இருவரும் குறைவற்று, இவர்கள் தாமும் தக்க யௌவனப் பருவத்தையுடையவர்களுமாய் இருக்க; இவர்களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க, இவனும் தெய்வாதீனமாக ‘வேட்டைக்கு’ என்று புறப்பட, இவளும் ‘பூக்கொய்து விளையாட’ என்று உத்தியானத்திற்குப் புறப்பட, அவ்விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க இருவர்க்கும் 2கண் கலவி உண்டாக, சிலர் காரணமாக வந்த கலவி அல்லாமையாலே பிரிவோடே முடிவுற்றுப் பிரிய, குணாதிகர்களாகை

_____________________________________________________

  “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
   உருவு நிறுத்த காம வாயில்
   நிறையே அருளே உணர்வொடு திருவென
   முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.”

  “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
   மிக்கோ னாயினும் கடிவரை யின்றே.’

  “பெருமையும் உரனும் ஆடூஉ மேன.”

  “அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த
   நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.”

   என்பன தொல்காப்பியம.்

1. “தலைமகற்கு அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி என்பன குணம். நிறை
   என்பது, காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ஓர்ப்பு
   என்பது, ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். கடைப்பிடி என்பது,
   கொண்ட பொருள் மறவாமை. இனித் தலைமகட்கு நாண் மடம் அச்சம்
   பயிர்ப்பு என்பன குணம். நாண் என்பது, பெண்டிர்க்கு இயல்பாகவே
   உள்ளதொரு தன்மை. மடம் என்பது, கொளுத்தக் கொண்டு கொண்டது
   விடாமை. அச்சம் என்பது, பெண்மையில் தான் காணப்படாததோர் பொருள்
   கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பு என்பது, பயிலாத பொருட்கண்
   அருவருத்து நிற்கும் நிலைமை” என்பது இறையனார் களவியலுரை.

2. கண்கலவி-காந்தர்வ புணர்ச்சி; அல்லது, இயற்கைப் புணர்ச்சி.