பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
162

    ஈடு :- இரண்டாம்பாட்டு. 1தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.

    கண்ட இன்பம் - 2“ஐங்கருவி கண்ட இன்பம்” என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம். துன்பம் - பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம். கலக்கங்களும் தோற்றமுமாய் - இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும். தண்டமும் தண்மையும் - கோபமும் அருளும். தழலும் நிழலுமாய் - வெப்பத்தைச் செய்யக்கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய், கண்டுகோடற்கு அரியபெருமான் - 3இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. 4இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என்தான்! 5இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லாநின்றார்; மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னாநின்றார்;

 

1. பின் இரண்டு அடிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார்.

2. “கண்ட இன்பம்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஐங்கருவி’ என்று
  தொடங்கி. இது, திருவாய். 4. 9 : 10.

3. “கண்டு கோடற்கரிய” என்பதற்கு, அவதாரிகையில் கூறிய பொருளைத்
  தவிர, வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘இவை எல்லாவற்றாலும்’
  என்று தொடங்கி. இவையெல்லாவற்றாலும் - “கண்ட இன்பம்” தொடங்கி
  இங்குச் சொல்லப்பட்ட இவை எல்லாவற்றாலும் என்றபடி. என்றது,
  ‘இவ்வளவு’ என்று எல்லை காணமுடியாத பரந்த விபூதியையுடைய
  சர்வேசுவரன் என்றபடி.

4. “கண்ட இன்பம்” என்று தொடங்கி, “தழலும் நிழலுமாய்” என்றது முடிய,
  விசேஷ்ய விசேஷணங்களைப் பிரிய நினையாதே சொல்லிக் கொடு
  போந்து, “கண்டுகோடற்கரிய பெருமான்” என்று விசேஷ்யமானவனையே
  அருளிச்செய்படியை அநுசந்தித்து வியாக்யாதா ஈடுபடுகிறார் ‘இவருடைய’
  என்று தொடங்கி. ஞானத்தின் தெளிவாவது, எல்லாம் பரம்பொருள்
  மயமாகவே தோற்றுகை.

5. அதனை விவரணம் செய்கிறார் ‘இங்கே சில’ என்று தொடங்கி.