பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
200

அங

    அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் - 1 அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் - ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். 2‘குடிவாய் உடன்பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லையாகில் உழக்கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள். காண்டல் இன்றி வளர்ந்து - கம்சனும் அவன் வரக்காட்டின தீயோர் கூட்டமும் காணாதபடி வளரப்பெறுவதே! கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்-ஸ்ரீ நாரத பகவான் அறிவித்தபின்பு ஒருபோது தாழாதே வந்து, அவன்தான் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடே போக்கினதும். கம்சன் முடியும்படியாக வஞ்சனை செய்தது, 3இராமாவதாரம் போலே ‘செவ்வைப்பூசல் அல்லது அறியேன்’ என்று இராமை அன்றோ. ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் - தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன். ஈண்டு - இப்போது. எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்டபின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ? இகல் - பகை. அன்றிக்கே, கம்சனை முடித்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப்பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை என்கிறாராகவுமாம்.

(5)

 

1. “ஓர்” என்கிறவருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அந்த
  நிலையிலே’ என்று தொடங்கி. அஞ்சினான் புகலிடம் - அஞ்சினவன்
  புகும் இடம்.

2. அச்சத்தை அறியாமையின் எல்லையைக் காட்டுகிறார் ‘குடிவாய்’ என்று
  தொடங்கி. ‘குடிவாய் உடன்பட இருந்தானாகில்’ என்றது, குடிமக்களோடே
  ஒத்திருந்தானாகில் என்றபடி. குடிவாய் - குடிமக்கள். உழக்கோல் -
  தாற்றுக்கோல்.

3. “அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
   நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

  “நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
   கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”

  என்பன, கம்பராமாயணம்.

(அங்கதன் தூது. 8. முதற்போர். 251.)

      “ஊராண்மை, உபகாரியாந்தன்மை: அஃதாவது, இலங்கையர் வேந்தன்
  போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது
  நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற் செல்லாது ‘இன்றுபோய்
  நாளை நின் தானையோடு வா’ என விட்டாற் போல்வது” என்பது,
  பரிமேலழகருரை. திருக்குறள், 773.