பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
258

    மாலுக்கு - 1“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, நீ எனக்கு வேண்டா என்ன, நீ எனக்கு வேண்டும் என்று தடுமாறி நின்ற நிலையைக் காட்டியாயிற்று இவளை இப் பாடுபடுத்திற்று. 2சர்வேசுவரனான உயர்வு தோற்ற நின்றானாகில் இப் பாடுபடாள் கண்டீர்! வையம் அளந்த மணாளற்கு - 3உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம். “அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக்கொண்டான் அன்றோ. 4அச்செயலுக்கு எழுதிக்கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ; 5“மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே. மணாளன் - அநுபவிக்கிறவன். நீலக் கருநிற மேக நியாயற்கு-நெயத்துக் கறுத்த நிறத்தையுடைய மேகத்தைப் போன்ற தன்மையற்கு. அன்றிக்கே, நியாயம் - சமம், ஒப்பு என்னுதல். 6வேறு பிரயோஜனம் கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாத

 

1. மால் - வியாமோகத்தையுடையவன். அந்த வியாமோகந்தான் எது? என்ன,
  அருளிச்செய்கிறார் “மின்னிடை மடவார்” என்று தொடங்கி.

2. “மால்” என்ற பதத்துக்கு, எதிர்மறைமுகத்தால் பாவம் அருளிச்செய்கிறார்
  ‘சர்வேசுவரனான’ என்று தொடங்கி.

3. “வையம் அளந்த” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘உகவாதாரையும்’
  என்று தொடங்கி. என்றது, விருப்பம் இல்லாத சேதநரையும் விடமாட்டாமல்
  திருவுலகு அளந்தருளி அவர்களைச் சேஷமாக்கிக் கொண்டாற் போன்று,
  பிரணயகோபத்தாலே முகம் மாறிநின்ற இவளையும் “அழித்தாய் உன்
  திருவடியால்” என்று அந்த மறத்தை மாற்றித் தனக்குச்
  சேஷமாக்கிக்கொண்டான் என்றபடி.

4. “மணாளற்கு” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அச்செயலுக்கு’ என்று
  தொடங்கி.

5. அப்படி எழுதிக்கொடுத்தாளோ! என்ன, “மூவடிமண்” என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். “மூவடிமண்” என்பது, பெரிய
  திருமொழி, 9. 4 : 2. இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி. உரை என்று
  மாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்று
  கொண்டாட்டத்தைக் கூறுவதாய், உலகத்தாருடைய
  கொண்டாட்டத்தையுடைத்தாயிருக்கும் என்னுதல்.

6. மேகத்தின் தன்மை யாது? என்ன, ‘வேறு பிரயோஜனம்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.