பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
265

மாடுடை - செல்வம் பொருந்திய என்னுதல்; ‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல். நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு - நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூதுபோய் அதனாலே பூர்ணனானவனுக்கு. 1பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும். 2“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனா தியர்களாக இருக்க. 3“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச் செய்யத்தக்க செயலைச் செய்து முடித்தவரானார்” என்றது போன்று. ‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள். 4அடியிலே உலகத்தை உண்டாக்கி, அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழிதொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி இவள் நீர்மையைக் கவர்ந்தான். என்பாடுடை அல்குல்-இடமுடைத்தான நிதம்பப்பிரதேசத்தையுடையவள். பாடு - இடம். 5“திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்” என்பது போன்று, ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.

 

1. நாடு இழந்த பாண்டவர்களை “நாடுடைமன்னர்” என்பது என்? என்ன,
  “பகவத் அபிப்பிராயத்தாலே” என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்
  செய்கிறார்.

2. “ஈ இருக்குமிடமெனினும் இப்புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”
  என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.) குறிச்சி - குப்பம்; சிறிய ஊர்.

3. அடியார்களுடைய காரியத்தைச் செய்வதனாலே பூர்ணனாயிருப்பானா?
  இறைவன் எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீராம பிரான்’
  என்று தொடங்கி.

  “அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
   க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”

  என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.

4. முதல் மூன்று அடிகளையும் கடாக்ஷித்து, பாவம் அருளிச் செய்கிறார்
  ‘அடியிலே’ என்று தொடங்கி.

5. அல்குலைக் கொண்டாடுவதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘திரௌபதியினுடைய’ என்று தொடங்கி.

  “பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
   யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”

 
என்பது, பாரதம்.