பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
283

New Page 1

வெறுத்து, ‘போகக் கடவதாகத் துணிந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போனால் ஆகாதோ? தனிவழியே போவதே! நான் கூடப் போகாவிட்டால் அவனுடனே கூடப் போகவும்பெறாது ஒழிவதே! இவள் தான் எங்ஙனே போகிறாளோ! நாடு அடங்க வாழ்வித்துக் கொண்டு போகிறாளோ! அங்கே புக்கால் என்படுகிறாளோ! வழியிலுள்ளார் என் சொல்லுகிறார்களோ! 2அங்கே புக்கால் அவ்வூரிற் சோலைகளையும் அங்குள்ள நீர்நிலைகளையும் அவன் குணங்களையும் கண்டு உகக்கிறாளோ! கண்டு சிதிலை ஆகிறாளோ! இவை எல்லாம் தாம் அங்கே சென்று புக்கால் அன்றோ என்றாற்போலே மனோரதித்துக்கொண்டு, 3தன்னைப் பார்த்தல் எங்களைப் பார்த்தல் செய்யாதே, 4இவற்றை எல்லாம் கடலிலே கவிழ்த்துப் போவதே!’ என்று திருத்தாயார் இன்னாதாகிறாள்.

 

1. “எம்மை ஒன்றும் நினைத்திலள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிப்
  ‘போகக்கடவதாகத் துணிந்தால்’ என்று தொடங்கியும், “இதெல்லாம்
  கிடக்க” என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தனி வழியே’ என்று
  தொடங்கியும், ‘அவன் கிடந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘நான்
  கூட’ என்று தொடங்கியும், “ஒல்கி ஒல்கி” என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி ‘இவள் தான்’ என்று தொடங்கியும், “ஊரும் நாடும்’ என்றதனைத்
  திருவுள்ளம்பற்றி ‘நாடு அடங்க’ என்று தொடங்கியும், “கோவைவாய்
  துடிப்ப” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அங்கே புக்கால்’ என்று
  தொடங்கியும், “கொல்லை என்பர் கொலோ” என்பது போன்றவைகளைத்
  திருவுள்ளம்பற்றி ‘வழியிலுள்ளார்’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.

2. “பூவியலும் பொழிலும்” என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றி
  ‘அங்கே புக்கால்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். “எங்ஙனே
  உகக்குங்கொல்”, “நின்று நின்று நையும்” என்பனவற்றைக் கடாக்ஷித்து
  ‘உகக்கிறாளோ? கண்டு சிதிலை ஆகிறாளோ?’ என்கிறார். “செல்லுங்கொல்”
  என்றதனைக் கடாக்ஷித்து ‘இவையெல்லாம்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.

3. “இதெல்லாம் கிடக்க” என்றதற்கு அருளிச்செய்யும் இரண்டாவது
  பொருளைத் திருவுள்ளம்பற்றித் ‘தன்னைப் பார்த்தல், என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். என்றது, தன்னுடைய மிருதுத் தன்மையைப் பார்த்தல்,
  பிரிவினால் நாங்கள் படுகிற வருத்தத்தைப் பார்த்தல் என்றபடி.

4. “ஊரும் நாடும். . . . . .பிதற்ற” என்கையாலே, ‘இவற்றை எல்லாம் கடலிலே
  கவிழ்த்துப் போவதே!’ என்கிறாள்.