பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
400

இவற

இவற்றையும் வல்லவர்கள் நீர் ஊறுகின்ற ஊற்றிலேயுள்ள நுண்ணிய மணல் போன்று நீராக உருகாநிற்பர்.

    வி-கு :- நாற்றம் - வாசனை; “பொன்மலர் நாற்றமுடைத்து” என்றார் பிறரும். சடகோபன் பிரான் அடிமேல் சொன்ன ஆயிரம் என்க. வல்லார் நீராய் உருகாநிற்பர் என்க.

    ஈடு :- முடிவில், 1இத் திருவாய்மொழியில் ஆழ்வாருடைய துன்பத்தை நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.

    மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு - 2சுரம் ஏறுவாரைப்போலே, பக்திபரவசராயிருப்பார்க்கு அடைவுபடப் பாசுரமிட்டுச் சொல்லப் போகாதன்றோ; இவ்வளவிலும் அவன் நினைவு மாறாமையாலே, சொற்கள் நேர்பட்டபடி; நல்ல சொற்களைத் தெரிந்துகொண்டு. மதுசூதபிரான் அடிமேல் - 3விரோதிகளை அழித்தலையே நிரூபகமாகவுடையவன் திருவடிகளிலே. நாற்றம்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன - 4‘தனி இடத்திலே ஆள் விடுகையினாலே வரவு தப்பாது’ என்று இவர் தரித்தவாறே, சோலைகளும் நித்திய வசந்தமானபடி. வாசனையை மிகுதியாகக்கொண்ட பூவையுடைத்தான பொழில்கள் சூழ்ந்த திருநகரி. தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் - 5“மனம் முன்னே வார்த்தை பின்னே” என்கிற அடைவால் சொன்னவையல்ல. என்றது, இவர் கலங்கிச்சொல்லச் செய்தேயும், பகவானுடைய அவதாரம்போலே தோன்றின என்றபடி. தோற்றம் - தோன்றுதல்.

 

1. “உருகா நிற்பர் நீராய்” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. இத்திருவாய்மொழியில் இவருடைய பக்தி பாரவஸ்யத்தை அநுசந்தித்துச்
  சங்கிக்கிறார் ‘சுரம் ஏறுவாரைப்போல’ என்று தொடங்கி. சுரம் -
  மலையின்மேல் ஏறுதற்குரிய அரியவழி. ‘சொல்லப் போகாதன்றோ’
  என்றதன்பின், ஆயிருக்க, “மாற்றங்கள் ஆய்ந்து” என்பது என்? என்னும்
  வினாவைச் சேர்த்துக் கொள்க. அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி.

3. “மதுசூதன்” என்று நிரூபகமாகச் சொல்லுகையாலே, ‘விரோதிகளை
  அழித்தலையே நிரூபகமாகவுடையவன்’ என்கிறார்.

4. நாற்றம் கொள் பூம் பொழிலாக இருக்கக் கூடுமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தனி இடத்திலே’ என்று தொடங்கி.

5. ‘தாமாகவே தோன்றின’ என்பதற்கு வேறுபாடு காட்டுகிறார் ‘மனம்முன்னே’
  என்று தொடங்கி. இப்படிச் சொன்னதனால் பலித்த பொருளை
  அருளிச்செய்கிறார் ‘இவர்கலங்கி’ என்று தொடங்கி.