பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
409

ஆய

    ஆயின், சிவனை முறைபடச்சொல்லுவான் என்? என்னில், அழித்தலை முன்னாகக் கொண்டேயன்றோ படைத்தல்தான் இருப்பது. 1‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே, 2“யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொருவனுக்கு மண் முதலியவை சரீரமோ” என்கிறபடியே, சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது. ‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப்படுத்திச் சொல்லுகையாலே, 3நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்றவர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று. 4உலகத்தைப் படைத்தது உன்னை அடைவதற்காக அன்றோ? உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது? படைப்புக்குப் பிரயோஜனமாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்துகொண்டிருக்கிற ஒருவனை அந்தமில் பேரின்பத்தே கொடுபோய் வைக்கை அன்றோ. அது கிடக்க, இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெறவேண்டாவோ? 5‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’

 

1. “நீராய் நிலனாய்” என்றதன்பின் சந்திர சூரியர்களைக் கூறியதற்கும்,
  சந்திர சூரியர்களைக் கூறியதன்பின் சிவனையும் பிரமனையும்
  கூறியதற்கும் பாவம் அருளிச்செய்கிறார் ‘நீராய் நிலனாய்’ என்று
  தொடங்கி.

2. “யஸ்யாத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீசரீரம்” என்பது, பிருஹ. உப.

3. நியமிக்கப்படுகின்ற பொருள் - சந்திரசூரியர்கள்.

4. “நீராய். . . . . .அயனானாய்” என்றதற்கு, இரண்டு கருத்து
  அருளிச்செய்கிறார். முதல் கருத்து, உலகமே உருவமாக இருக்கிற
  இருப்பைக் காட்டினால் மாத்திரம் போதாது, அசாதாரண
  விக்கிரஹத்தையும் காட்டவேண்டும் என்பது. இரண்டாவது கருத்து,
  படைப்புக்குப் பயன் எல்லாரும் முத்தியைப் பெறுதலே அன்றோ?
  அதனைப் பெற வேண்டாவோ? என்பது. இவற்றுள், முதல் கருத்தை,
  இத்திருப்பாசுரத்தின் அவதாரிகையாலும், ‘இது அறியாமல்’ என்று
  தொடங்கும் வாக்கியத்தாலும் அருளிச்செய்து, இரண்டாவது கருத்தை
  அருளிச்செய்கிறார் ‘உலகத்தைப் படைத்தது’ என்று தொடங்கி.
  ‘உலகத்தைப் படைத்தது’ என்றது முதல் ‘நீ பெற வேண்டாவோ? என்றது
  முடிய உள்ள வாக்கியங்கள், ஒன்றனை ஒன்று விவரணம் செய்கின்றன.
  ‘அது கிடக்க’ என்றது, என்னுடைய துயரைப் போக்குதல் கிடக்க
  என்றபடி.

5. நேரே, காணல்வேண்டும் என்பது மாத்திரமே அல்லாமல், படைத்தல்
  முதலிய செயல்களையும் அருளிச்செய்கையாலே, இவருடைய ஞானத்தின்
  தெளிவினை நினைத்து வியாக்யாதா ஈடுபடுகிறார் ‘நீராய்’ என்று
  தொடங்கி.