|
New Page 1
பொ-ரை :-
பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல்
நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கின்றவனே! பூவுலகத்தில் பல அவதாரங்களைச்
செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே! எண்ணுக்கும்
அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே! என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு
கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?
வி-கு :-
முதல் இரண்டு அடிகளில் இறைவனுடைய 1ஐவகை
வடிவுகள் கூறப்பட்டுள்ளமை காண்க.
ஈடு :-
ஐந்தாம் பாட்டு. 2எல்லாவிடங்களிலும்
அண்மையிலிருப்பவனாய் என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து, என் கண்களுக்கு விஷயமாகாது
ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.
விண்மீது
இருப்பாய் - 3எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக்
கொண்டிருக்கும்படி. 4இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரமபதத்தில்
இருப்புக்காணும் முற்படத்தோற்றுகிறது. மலைமேல் நிற்பாய் - 5நித்திய சூரிகளையும்
நித்தியசம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது, இங்குள்ளாரும் தன்
நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி. வேங்கடத்து ஆடுகூத்தன் அல்லனோ.
1. “ஐவகை வடிவாய் எங்குமாய்
நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன்
செய்யொளி திகழும் பங்கயக்கண்ணன்
திருமகள் கொழுநன்”
என்பது, வில்லிபாரதம்.
2. திருப்பாசுரம் முழுதினையும்
திருவுள்ளம்பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
3. “விண் மீதிருப்பாய்”
என்றதற்குக் கருத்துப் பொருள் அருளிச்செய்கிறார்
‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.
4. இங்கே அண்மையில்
இருக்கிற அர்ச்சாவதாரம் தொடங்கி
அருளிச்செய்யாமல், முற்பட “விண்மீதிருப்பாய்” என்கிறது
ஏன்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்க்கு’ என்று தொடங்கி.
5. “மலை” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நித்தியசூரிகளையும்’
என்று தொடங்கி. “நிற்பாய்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார்
‘இங்குள்ளாரும்’ என்று தொடங்கி. திருமலையில் நின்ற நிலை ருசியை
உண்டாக்குமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வேங்கடத்து’ என்று தொடங்கி. இது, பெரிய
திருமொழி, 2. 1 : 9.
|