பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
427


    வி-கு :-
ஓர் அடி பாய் வைத்து என்க. பாய் - பரப்பி. பாய், தாய் என்பன : வினையெச்சங்கள். தீயோடு - தீயின் ; வேற்றுமை மயக்கம்.

    ஈடு :- ஆறாம்பாட்டு. 1‘உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவோம்; அதில் ஒரு குறை இல்லை; ஆனாலும், பிரயோஜனம் உம்மதானபின்பு நீரும் சில முயற்சிகளைச் செய்யவேணும் காணும்’ என்ன, இந்த மரியாதை என்று தொடங்கிக் கட்டிற்று என்கிறார். அன்றியே, காண்கைக்குத் தாம் தக்கவரல்லர் என்று உபேக்ஷித்தானாக நினைத்து, தகுதி தகுதிஇன்மைகளைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உன்னாலே இழக்கப்படுவோர் உளரோ? என்கிறார் ஆகவுமாம்.

    ஓர் அடி பாய் வைத்து - 2சேதனர்தலைகளிலே திருவடியை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? 3வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன்கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ. ஓர் அடியைப் பரப்பிவைத்து. அதன் கீழ் - அத் திருவடியின் கீழே. பரவை நிலம் எல்லாம் தாய் - கடல் சூழ்ந்த பூமிப்பரப்படங்கலும் அளந்து. 4சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்துகொண்டது. 5பரக்கவைத்து அளந்துகொண்ட பற்பபாதன் அன்றோ. ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த - மற்றைத் திருவடியால் பிரமலோகத்தளவும் சென்று தீண்டிய. ‘எல்லா உலகும்’ என்றது, நடுவே உள்ள உலகங்களை. தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார். மாயோன் - தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான்

 

1. இப்போது தாம் அவனைப் பெறாமல் கூப்பிடுகிற இவர், திருவுலகு
  அளந்தருளின செயலைச் சொல்லுகிறதற்குத் தகுதியாக அவதாரிகை
  அருளிச்செய்கிறார் ‘உம்முடைய’ என்று தொடங்கி.

2. “பாய் ஓர் அடி வைத்து” என்கிறவருடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘சேதநர்’ என்று தொடங்கி. ‘எவ்வளவு
  வருந்தினார்கள்’ என்றது, எந்தச் சாதநங்களைச் செய்து வருந்தினார்கள்
  என்றபடி.

3. “எல்லாம்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வசிஷ்ட சண்டாள’
  என்று தொடங்கி.

4. “பரப்பி வைத்து” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘சங்கல்பத்தாலே’ என்று தொடங்கி. என்றது, பத்தும் பத்தாகச் செய்தான்
  என்கைக்காக விசேடிக்கிறது என்றபடி.

5. பரப்பி அளந்துகொண்டதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பரக்க வைத்து’
  என்று தொடங்கி. இது, திருச்சந்தவிருத். 32.