பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பண

326

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பணிப்பர். 1மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து, நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ? திங்களும் ஞாயிறுமாய் - 2‘சூரியகிரணங்களால் உண்டான தாபத்தைச் சந்திரன் நீக்கினான்,’ என்கிறபடியே, சூரியனுடைய கிரணங்களாற்பிறந்த வெப்பம் எல்லாம் போம்படி குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான சந்திரனும் அவனால் வந்த குளிர்ச்சியை அறுத்துக்கொடுக்கும் சூரியனுமாய். 3செழும் பல் சுடராய்-சேதநர்க்கு வரும் லாபாலாபங்களை அறிதற்குத் தகுதியான சஞ்சாரத்தையுடைய நக்ஷத்திரங்ளுமாய்.

    இருளாய் - சேதநர்கட்கு இன்ப நுகர்ச்சிக்கு உரியதான இருளாய். பொங்கு பொழி மழையாய் - எல்லாப் பிராணிகளும் உயிர்வாழலாம்படி பயிர்களை உண்டாக்கும் மழையுமாய். புகழாய் - எல்லாரும் ஆசைப்படும் கீர்த்தியாய். பழியாய்-எல்லாரும் வருந்தியும் நீக்கக் கூடியதான பழியாய். பின்னும்-அதற்கு மேலே. வெங்கண் வெங் கூற்றமுமாம் - 4‘முன்னே இளகின மனத்தையுடையவரும் புலன்களை அடக்கியவரும் எல்லாப் பிராணிகளுக்கும் நலத்தைச் செய்வதில் விருப்பமுடையவருமாய் இருந்துவிட்டு இப்போது சீற்றத்தை அடைந்து இயல்பான தன்மையை விடத் தக்கவர் அல்லர்’ என்கிறபடியே, இவை மிகுதியுற்றவாறே குளிர நோக்குமது தவிர்ந்து, வெவ்விதான நோக்கினையுடையையாய். அன்றிக்கே,

______________________________________________________________________________

1. ‘மேல் திருவாய்மொழியிலே துன்பத்தைச் செய்வனவாக அருளிச்செய்த பொருள்களை,
  தாரகமாக அனுபவிக்கிற இத்திருவாய்மொழியிலே நினைத்தல் தகுமோ?’ என்ன, ‘மாயன்
  குழல்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. சூரிய சந்திரர்களுக்குரிய விசித்திரத் தன்மையை அருளிச்செய்கிறார், ‘சூரிய கிரணங்களால்’
  என்று தொடங்கி.

        ‘ஸூர்யாம்ஸூ ஜநிதம் தாபம் நிந்யே தாராபதி: ஸமம்
         அஹம் மாநோத்பவம் துக்கம் விவேக: ஸூமஹாந் இவ’

என்பது ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 10 ; 13.

3. ‘செழுமை’ என்பது, ஈண்டு அழகினைக் குறிக்கின்றது. ‘நக்ஷத்திரங்களுக்கு அழகாவது
  யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சேதநர்க்கு’ என்று தொடங்கி.

4. ‘வெங்கண்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘முன்னே’ என்று தொடங்கி.

        ‘புரா பூத்வா ம்ருது: தாந்த: ஸர்வபூத ஹிதேரத:
         ந க்ரோதவஸம் ஆபந்ந: ப்ரக்ருதிம் ஹாதும் அர்ஹஸி’

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 65 : 4.