பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

332

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ஈடு : ஐந்தாம் பாட்டு. இத்திருவாய்மொழிக்கு 1நிதானமான பாட்டாயிற்று இது. அதாவது, ‘மயர்வற மதிநலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே என்னை வைத்து வாழ்வித்துக்கொடு போகிற இவ்வாச்சரியம் இருந்தபடியை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்கிறார்.

    பாசங்கள் நீக்கி - மயர்வை அறுத்து; என்றது, ‘அவித்தியை முதலானவைகளைப் போக்கி’ என்றபடி. 2பல செய்வினை வன்கயிற்றால் சூழ்த்துக்கொண்டதனை நீக்கி. என்னை-வேறு விஷயங்களிலே கார் தாழ்ந்திருக்கிற என்னை. உனக்கே அறக்கொண்டிட்டு-துயர் அறு சுடர் அடி தொழும்படியாகச் செய்து. ‘பாசங்கள் நீக்கிற்றும் தனக்கே அறக்கொண்டதும் எதனைக்காட்டி?’ என்னில், வாசம் மலர்த் தண்துழாய் முடி மாயவனே - வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று, 3புறம்பு உண்டான பற்று அறுத்ததும், தனக்கேயாம்படியாகச் செய்ததும். அருளாய் - இவ்வளவு புகுரநின்ற என்னை இங்கே இட்டுவைத்து நலியவோ? காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் -சரீரமும் ஆத்துமாவுமாய், பிறப்பு, இறப்புகளுமாய். பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி-உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான என்னைச் சம்சாரத்திலே வையாநின்றாய். இவை என்ன மயக்குகளே-இவை என்ன தெரியாத செயல்கள்தாம்! புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே நீ அங்கீகரித்தாயோ என்று இராநின்றேன்; பின்னையும் இச்சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இராநின்றேன்; இது என்ன மயக்கம்!

(5)

______________________________________________________________________________

1. உலக உருவமாக இருக்கிற ஆச்சரியமான தன்மையை அனுபவிக்கைக்குக் காரணம்
  சொல்லுகிறது ஆகையாலே, இதனை ‘நிதானமான பாட்டு’ என்கிறார். அதனை விவரணம்
  செய்கிறார், ‘அதாவது’ என்று தொடங்கி.

2. ‘அவித்தியை முதலானவைகள் பாசங்களாமோ?’ என்ன, ‘ஆம்’ என்று அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘பலசெய்வினை’ என்று தொடங்கி. இது, திருவாய். 5. 1 : 5.

3. மேலதனை விவரணம் செய்கிறார், ‘புறம்பு உண்டான’ என்று தொடங்கி.