பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

எட்டாந்திருவாய்மொழி - பா. 10

339

    ஈடு : பத்தாம் பாட்டு. 1வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் காரணாமாய் அதிசூக்ஷ்மமாயிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும் விபூதியாகவுடையவனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

    இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் - இதனைக்காட்டிலும் வேறு சூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி. அதாவது, இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே பிரமத்தினுடைய நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச வேண்டும்படி, காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு. தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே - 2‘முதன்முதலில் ‘சத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ? ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று. அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-பரமபதத்தையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. அல்லியையுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமார்பினையுடையவனே! அச்சுதனே - அவ்விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரமபதத்திலே எழுந்தருளியிருக்கிற இருப்பை எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

    வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் - இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்: ‘இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சொல்லிற்றாமத்தனை போக்கியல்லது, உனக்கு ஓர் அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்; அப்போதைக்கு, 3அதுவே உனக்கு ஆம் வண்ணம்? - 4‘அது அன்று என்கிறது’ என்னுதல். அன்றிக்கே, உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு

______________________________________________________________________________

1. ‘தொல்லை நன்னூலில் சொன்ன, இல்லை அணுக்கங்களே, இதனில் பிறிது என்னும்
  வண்ணம், உருவும் நீயே’ என்பனவற்றைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘வேதத்தில் எங்கே சொல்லிற்று?’ என்ன, முதன்முதலில்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.

        ‘ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்’

என்பது, சாந்தோக்யம், 6. 2 : 1.

3. முதற்பொருளில் ‘அதுவே’ என்றதிலுள்ள ‘ஏகாரம்’ எதிர்மறை. இரண்டாவது பொருளில்
  ‘ஏகாரம்’ தோற்றம்.