பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 3

357

திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு, ‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச்செய்தாராம்’ என்பது. என் நா முதல் வந்து புகுந்து - 1சர்வேஸ்வரன் பிரமனுக்குத் திருவருள் செய்ய, அவன் பின்னர் 2‘முனிவரே! இந்தச் சரஸ்வதியானது என்னுடைய அருளாலேயே உமக்கு உண்டாயிற்று; நீர் இராமசரிதம் முழுதினையும் செய்யும்,’ என்கிறபடியே அவன் சரஸ்வதியை ஏவி, இப்படி நாலிரண்டு நிலை நின்றே அன்றோ ஸ்ரீவால்மீகி பகவானைப் பேசுவித்தது? அங்ஙனம் ஓர் இடையீடு இன்றிக்கே, என்னுடைய நாக்கிலே முற்பாடனாய் வந்து புகுந்து. அன்றிக்கே, 3‘என் நாவுக்கு அடியாய் வந்து புகுந்து’ என்னுதல்.

    நல் இன் கவி - இலக்கணங்கள் எல்லாம் நிறைந்தவனாய், அந்த இலக்கணங்கள் கிடக்கச்செய்தே, சொல்லில் இனிமை தானே கவர்ச்சிகரமாம்பாடி இனியவான கவிகளை. தூ முதல் பத்தர்க்கு - சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, 4‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்கிறபடியே அவர்கள் கொண்டாடும்படி சொன்ன. அன்றிக்கே, ‘சம்சாரத்திலே தலை நின்ற முழுக்ஷூக்களுக்கு’ என்னுதல். தான் தன்னைச் சொன்ன -தானே சொல்லுதல், நானே ஒருபடி சொல்லுதல் செய்கை அன்றிக்கே, என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று. என் வாய் முதல் அப்பனை -எனக்கு வாயத்த காரணனான மஹோபகாரகளை. அன்றிக்கே, ‘என் நா முதல்’ என்றதுதன்னையே பின் மொழிந்து, ‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.

______________________________________________________________________________

1. ‘என் நா முதல் வந்து புகுந்து’ என்பதற்கு, ‘என் நாவிலே முற்பாடனாய் வந்து
  பிரவேசித்து’ என்றும், ‘என் நாவுக்கு முதலான காரணமாய் வந்து புகுந்து’ என்றும்
  பொருள் கொள்க. இவ்விரண்டு பொருளையும் முறையே அருளிச்செய்கிறார்,
  'சர்வேஸ்வரன்’ என்று தொடங்கியும், ‘அன்றிக்கே,’ என்று தொடங்கியும்.

2. ‘மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
   ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம’

என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 31.

3. ‘என் நாவுக்கு அடியாய்’ என்றது,’ என்றது, ‘என் நாவின் செயலுப்பு அடியாய்’ என்றபடி.

4. ‘கேட்டு ஆரார்’ என்பது, திருவாய். 10. 7 : 11.