தலைக்கு மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் தோன்றுகிறது. மிக சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும், கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது மட்டுமன்றி பேராச்சர்யம் தருவதுமாகும். 3) எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம், வெஃகா தான் என்று சொல்லாமல் சொல்வதைப் போலவும், எல்லோராலும் மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும், காஞ்சி மண்ணிற்கே தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த ஸ்தலங்களாக விளங்குகின்றது என உணர முடிகிறது. 108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கடமலையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும், கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து அரங்கனையும் தனித்துவம் படுத்தலாமென்றிருந்தாலும் ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த திருக்கோலங்கட்கு காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து மங்களாசாசனம் செய்துள்ளனர் என்று கொள்ளலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள் ஊரகம், பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம். அ) வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் - நான்கிடத்தும் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே என்றால் கெடுமாம் இடர். | என்ற பொய்கையாழ்வாரின் பாசுரத்தில் வெஃகாவைக் குறிப்பிட்டிருப்பது தொன்மைக்காலத்தே 108 திவ்ய தேசங்களில் மூன்று திருக்கோல எம்பெருமான்களை ஒரு சேரக் குறித்தால் அது இந்த தொண்டை மண்டலத்தின் முத்தலமேயென்பதில் ஐயமில்லை. |