பக்கம் எண் :

400

     எதிர்ப்புறம் சிவனுக்கும் பிரம்மனுக்கும் கோவில்கள் இருப்பதால் இது
ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகப் புகழ்பெற்றுள்ளது.

     2. ஒரு முறை மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப்
பறித்து பகவானை அர்ச்சித்து வர கஜேந்திரனுக்குப் பூ கிடைக்காமல்
போயிற்று. இதனால் பகவானிடம் கஜேந்திரன் தனது நிலையை விளக்கி
முறையிட பகவான் லட்சுமி தேவியைப் பூப்பறிக்க வேண்டாமென்று
சொல்லிவிட்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப்
பறித்துப் பகவானை அர்ச்சிக்கலானான். பூஜையின்போது லட்சுமி தேவி
தனக்கு சமமான சிம்மாசனத்தை அளித்து அதிலமர்ந்து தன்னோடு சேர்ந்து
எம்பெருமானை பூஜிக்குமாறு வேண்டிக்கொண்டாள். எம்பெருமான் மனமுவந்து
பூஜையை ஏற்றுக் கொண்டு அவ்விருவருக்கும் காட்சி கொடுத்தான். இதனால்
இந்த ஒரு இடத்தில் மட்டும் மலையாள திவ்யதேசத்தில் லட்சுமி தேவிக்குத்
தனி சன்னதியுள்ளது.

     3. திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11
பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஸ்தலம். திருமங்கையாழ்வார்
தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும் திருநறையூருக்கும்
ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.