அலங்காரம் செய்துகொண்டு ஆடுவதும், கோவிந்தா, கோவிந்தாவென விண்ணதிர கூவுவதும், செவிக்கும் கண்களுக்கும் பக்தி பூர்வமான ஞானத்திற்கும் ஒரு அரிய விருந்தாகும். 14. அழகர் ஆற்றில் இறங்கும் போது என்னவிதமான பட்டாடை உடுத்தி கொண்டு வந்துள்ளார் என்று அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். அழகர் அணிந்துவரும் பட்டாடைக்கும், அடுத்த ஆண்டு விளையப்போகும் விளைச்சலுக்கும் தொடர்புண்டு என்பதும் இங்கு உள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா மதுரைத் திருவிழா எனவும், சித்திரைத் திருவிழாவெனவும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இதுதான் மதுரையில் நடக்கும் பெரிய திருவிழாவாகும். 15. இந்த அழகர் மலையில் உள்ள அழகிய மணவாளன் கிணற்றில்தான் முகம்மதியர் படையெடுப்பின் போது ரெங்கநாதனை இருமுறை கொணர்ந்து பத்திரப்படுத்தி வைத்தனர் என்று கோயில் வரலாறு கூறுகிறது. 16. இங்கு இராமானுஜர் மடம் இருந்தது. ஒரு ஜீயர் சுவாமிகள் இம்மடத்திற்கு தலைமைப்பொறுப்பேற்று நடத்திவரும் வண்ணம் செயல்பட்டு வந்தது. இராமானுஜருக்குப் பின்னர் பிரசித்தி பெற்ற மணவாள மாமுனிகள் இப்பீடத்தை அலங்கரித்தார். இதேபோன்று குலசேகரன் மடம். திருநாடுடையான் மடம், வானாதிராயன் மடம் என்ற மடங்கள் இருந்தமை பற்றியும் சாசனங்களால் அறிய முடிகிறது. 17. இம்மலையில் வேறுபல தெய்வங்களும் இருப்பதாக காலப்போக்கில் கூறப்படும் பழக்கம் உண்டாயினும் பௌத்தமும், ஜைனமும் அழகரே முக்கியமான தெய்வமென்று ஒப்புக்கொண்டதாக திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் பாசுரிக்கிறார். 18. இங்குள்ள 18ஆம்படி கருப்பண சுவாமி மிகவும் பிரசித்தி. மலையாளத்தரசன் ஒருவன் இவ்வழகரை அங்கு கொண்டு செல்ல வேண்டுமென்று திருடிச் செல்ல முயன்றான் அது முடியாமல் போகவே 18 பேர்களை (மந்திர தந்திரங்களில் தேர்ச்சிபெற்ற பணிக்கர்கள்) இங்கு அனுப்பி |