பக்கம் எண் :

1

முன்னுரை

     இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் மிக உயர்ந்தது. காலங்கடந்த
தொன்மை மிக்கது. ஆழமான பக்தி உணர்வும் நுணுக்கமான விளக்கங்களும்
நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்ட தெய்வீக மனங்கமழும் பொலிவு பெற்றது.
சரணாகதி தத்துவம் எனப்படும் உயர்ந்த லட்சியத்தைக் குறிக்கோளாகக்
கொண்டது. அதாவது தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பகவான் பார்த்துக்
கொள்வான். அவன் பாத கமலங்கட்குத் தொண்டு புரிதலே கடன். பற்றின்றி
காரியங்களில் ஈடுபட்டு அவனுக்குத் தொண்டுபுரிதல் ஒன்றே தமக்குத்
தொழில் என்ற நினைவுடன் வாழ்ந்தால், நமக்கு வேண்டிய அனைத்தையும்
அவன் கொண்டு வந்து தருவான் என்ற நம்பிக்கையே சரணாகதியாகும்.
முழுமையாக அவனிடம் நமது ஜீவாத்மாவை சரணாகதிப்
பண்ணிக்கொள்ளுதலே சரணாகதித் தத்துவமாகும். இந்த ஜீவாத்மா உலகின்
பிற காரியங்கட்காக வந்ததன்று. பரமாத்மாவோடு ஐக்கியம் அடைவதற்கே,
இந்த ஜீவாத்மா உலகில் பயணம் செய்கிறது. ஐக்கியம் அடைவதற்கு முதலில்
சரண் புகுவதே முக்கியம். இவ்விதமான பாதையில் தனது ஜீவாத்மாவை
செலுத்துவதற்கு ஒருவன் தெரிந்துகொண்டால் அந்த ஜீவாத்மாவிற்கு
பரமாத்மா காவலனாக வருவான்.

     இத்தகைய தத்துவத்தைக் கொண்ட வைணவக் கொள்கைகளின்
நெறிமுறைகள் திவ்யதேசங்களின் வரலாற்றினூடே இழைந்தோடிக்
கொண்டிருக்கிறது. “உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்ற
ஆழ்வாரின் பாசுரப்படி இந்த திவ்யதேசங்களின் வரலாற்றிடை,
எம்பெருமானும் வைணவ சித்தாந்தங்களும் இரண்டறக் கலந்துள்ளன. இந்த
திவ்யதேசங்களின் வரலாற்றை தெளிவாகவும், முழுமையாகவும் கற்றால்
வைணவ சித்தாந்தத்தை பூரணமாய் அறிந்து கொள்ள இயலும்.

     வைணவ சித்தாந்தத்தின் ஆழமான கருத்துக்களில் தூய்மையான
பக்தியும், சாதி, சமய வேறுபாடற்ற தன்மையும் மிகச் சிறந்தவைகளாகும்.

தூய்மையான பக்தி

     இன்று உலக மக்களிடையே பலவிதமான மத நம்பிக்கைகள்
காணப்படுகின்றன. இதில் வைணவ நம்பிக்கை தனித்தன்மை பெற்று
மிளிர்கிறது. அதாவது வைணவர்கள் சரணாகதித் தத்துவத்தில் முழு
நம்பிக்கை வைத்து உன்னிடம்