1006. வேழத்தர சங்கண் விரைந்து நடந்து சென்று
வாழ்வுற்றுல கஞ்செய் தவத்தினின் வள்ள லாரைச்
சூழ்பொற்சுடர் மாமணி மாநிலந் தோய முன்பு
தாழ்வுற்றெடுத் துப்பிடர் மீது தரித்த தன்றே.
 34

     (இ-ள்.) வெளிப்படை. பட்டத்து யானை அவ்விடத்தில்
விரைவாக நடந்துபோய், உலகம் வாழ்வுற்றுச் செய்யும் தவத்தின்
பயனாக உள்ளவராகிய அவரைத் தனது பட்டத்தின்
மய்யொளியுடைய மணிகள், நிலந் தோயும்படி முன்பு வணங்கி
எடுத்து அப்போதே பிடரின்மேல் தரித்துக்கொண்டது.

     (வி-ரை.) வேழத்தரசு - பட்டத்து யானை. அரசுவா என்பர்.
முன்னர்க் "கைம்மா" (998), "களியானை" (999) என்று கூறிய
ஆசிரியர், அரசரைத் தன்மேல் கொண்டிடவரும் இடமாதலின் இங்கு
இவ்வாறு சிறப்பித்தார். அன்றியும் மூர்த்தியாரை ஏந்தி வரும்
சிறப்பும் குறித்தபடி.

     அங்கண் - கோயிற்புறத்து மூர்த்தியார் நின்ற இடத்தின்கண்.

     வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் - வாழ்வுற்றதனால்
உலகம் தவம் செய்தது; அத்தவங் காரணமாக. தவஞ்செய்தது
மூர்த்தியாரை அரசராகப் பெறுதற்கு அத் தவஞ்செய்ததற்குமுன்னை
வாழ்வு காரணமாயிற்று என்க. உற்று - உற எனச்
செயவெனெச்சமாகத் திரிந்து வாழ என்றும் கொள்ளலாம்.

     தவத்தினால் - தரித்தது என்று கூட்டுக.

     வள்ளலார் - வரையாது கொடுப்போர். மூர்த்தியார்
சமண்போய்ச் சைவம் ஓங்குதற்பொருட்டுச் சந்தனக் கட்டைக்கு
ஈடாகத் தமது கையினை எலும்பு மூளை திறக்கும்வரை தேய்த்த
வள்ளன்மை குறித்தது.

     மணி மாநிலந்தோயத் தாழ்வுற்று - தலையைக் கீழே
நிலந்தோயத் தாழ்த்து வணங்கினமையால் பட்டத்தில் உள்ள
பொன்னிலழுத்திய மணிகள் நிலத்திற்றோய்ந்தன என்க.
பெருகோடை" நெற்றி (998) என்றமையால் யானையின் நெற்றிமேற்
பொற்பட்டம் அணியப்பட்டிருந்தது; அதனில் மணிகள் இருந்தன
என்பதாம். இவ்வாறன்றிச் சூழ்மாமணி - என்பதற்குப்
"படுமணியிரட்டு மருங்கின்" (திருமுருகு) என்றபடி யானையின்
இருபுறமும் தொங்கும் மணிகள் என்றுரைத்தலுமாம்.

     பிடர் - பிடரி - முதுகின் முன்புறம். 34