1382.
தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தி னிருந்து குலாவிய வன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச் சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசையோர்களுங் காண விறைஞ்சி யெழுந்தது வேழம்.

117
 
        (இ-ள்.) வெளிப்படை. குளிர்ந்த தமிழ்மாலைகளைப் பாடித் தமது பெருமானையே சரணமாகக்கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய, அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை அவர் முன்பு வலமாகச் சுற்றி வந்து எதிரிற்றாழ்ந்து எல்லாத் திக்கிலுள்ளவர்களும் காணும்படி அந்த யானை நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தது.
 
        (வி-ரை.) தண் தமிழ் மாலைகள் - தண் - தமிழ் எப்போதும் குளிர்ந்த நீர்மையுடையது என்றபடி. இயற்கை யடைமொழி. தட்பமாவது செவிக்கு இன்பந் தந்து அறிவும் தரும் தன்மையால், வேட்கையின் வெப்பந் தணிவித்தலும் உயிரின் பிறவி வெப்பத்தை மாற்றும் ஞானந்தரும் கருவியாதலுமாம். இது தமிழுக்குப் பொதுவாயினும் நாயன்மார்களது தமிழுக்குச் சிறப்பாயுரிய அடைமொழி. "ஞானத்தமிழ்" என்பது பிள்ளையார் திருவாக்கு. "தமிழ் மாருதம்" (313) என்றது காண்க. யானையின் சினமாகிய தீயைக் குளிரச்செய்த பயன் பற்றியும் இவ்வாறு கூறினார்.
 
        மாலைகள் - திருப்பதிகத்தினுள் ஒவ்வொரு திருப்பாட்டும் தனித்தனி ஒவ்வோர் மாலையாம் என்பது. "செந்தமிழ்மாலை பத்திவை" (தக்கராகம் - கற்குடி - 11) ஆராத சொன்மாலைகள் பத்தும்" (தக்கராகம் - பனையூர் - 11) முதலிய ஆளுடைய பிள்ளையாரது ஆட்சிகள் காண்க.
 
        பாடி - இருந்து - குலாவிய என்று கூட்டிக்கொள்க. தம்பெருமான் சரணாகக் கொண்ட கருத்தில் இருந்தது - பெருமானையே புகலாக. இரண்டனுருபும் தேற்றே காரமும் தொக்கன. பெருமான் சரண் ஆக - திருவடியின் தன்மை தமக்கு ஆக. சிவோகம் பாவனையினால் அவனே தானாக என்று உரைத்தலுமாம். கொண்ட கருத்தில் இருந்து என்பதும் இப்பொருளை வலியுறுத்தும். முன்னர் "விடையுகந் தேறும் பிரானை" (1380), "தேவர்க்குந் தேவர் பிரானார்" (1381) என்ற விடத்துரைத்தவை பார்க்க. "திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்" (திருத்தாளச்சதி - வியாழக் குறிஞ்சி - கழுமலம் - 7) என்றது பிள்ளையாரது திருவாக்கு. "அவனே தானே ஆகிய அந்நெறி, யேகனாகி" (11 - சூத்)" என்ற ஞானசாத்திரமும் கருதுக. சரண் - திருவருள் நிறைவு. "கழல் தெளிவுற்றனர்" (1379) என்றதும் கருதுக.
 
        இருந்து - பேரிடரையும் பொருட்படுத்தாது சிவன் கழலையே தெளிவுற்று அசையாதிருந்து. குலாவுதல் - விளக்க முறுதல். யாவரும் பரவுதல் என்றலுமாம். "குலாவு பாதம்" (443) முதலியவை காண்க.
 
        அன்பு உறு கொள்கை - அன்பினாற் பொருந்திய கொள்கையாவது அன்பினாற் கொள்ளப்படுதல். வசமாதல். அன்பே உருவமாக அமைந்த என்றபடி. இத்துணையும் தீயமிறைகள் செய்து இனியும் செய்ய நின்ற அமணரையும், அவர் சார்புகொண்ட கொடு மன்னனையும், வேழத்தையும் சிறிதும் வெகுளாது திருவடியினையே சிந்தித்திருந்தமையே அவர் அன்பினால் முழுவதும் கொள்ளப்பட்டனர் என்பதனைப் புலப்படுத்தும்.
 
        தொண்டர் - சிவனைத் தலைவராகவும் தம்மை அடியவராகவும் சிந்தித்திருந்தவர்.
 
        வேழம் வலமாகச் சூழ்ந்து - இறைஞ்சி - எழுந்தது என்று கூட்டுக. பழக்கப்பட்ட யானைகள் இவ்வாறு செய்தல் கண்கூடு. தண்டமிழாற் சினந்தீர்ந்து பெருமை யறிந்ததாலின் இவ்வாறு வழிபட்டது என்க. உண்மையில் இவ்வேழம் பெருந்தவ முடையதேயாம். நாயனாரால் அருணோக்கம் செய்யப்பெற்று (1381), உண்மை உணர்ந்து, தனது முன்னைச் சார்புவிட்டு, ஆசானைப் பணிந்து எழுந்ததன்றோ? அறிவுடைமக்கள் வழிபடும் முறையால் அவ்வேழம் வழிபட்டமை காண்க. வலம் வருதல் - தாழ்தல் - நிலத்தில் வீழ்ந்து இறைஞ்சுதல் - எழுதல் இவையே திருவேடத்தையும் ஆலயத்தையும் வழிபடும் முறைகளாம்.
 
        எழுந்த தவ்வேழம் - என்பதும் பாடம்.
117