1383.
ஆண்ட வரசை வணங்கி யஞ்சியவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர் தொடக்கி யடர்த்துத் திரித்து
மீண்டு மதனை யவர்மேன் மிறைசெய்து காட்டிட வீசி
யீண்டவர் தங்களை யேகொன் றமணர்மே லோடிற் றெதிர்ந்தே.

118
 
        (இ-ள்.) வெளிப்படை. ஆண்ட அரசுகளை இவ்வாறு வணங்கி அந்த யானை அங்குநின்றும் பெயர்ந்து போகவே, அதனை அரசுகளின் மேல் ஏவித் தூண்டி மேற்கொண்டிருந்த கொடிய பாகர்கள் தொடக்கியும், அடர்த்தும், திரித்தும், மீண்டும் அதனை அவர்மேல் போகும்படி கொடுமைசெய்து, காட்டிட, அவ்வாறு செய்யாது நெருங்கிய அவர்களையே வீசிக் கொன்று அமணர்கள் மேலே சாட எதிர்ந்து ஓடிற்று.
 
        (வி-ரை.) ஆண்ட - சிவபெருமானால் ஆட்கொண்டருளப்பட்ட. அரசு - திருநாவுக்கரசுகள்.
 
        தூண்டிய - கொல் என்று ஏவிய. "ஏவி - உய்த்திட" (1379).
 
        மறப்பாகர் - மறஞ் செய்தவர். மறம் - கொலைவினை.
 
        தொடக்கி - பெயராமல் பந்தித்து; அடர்த்து - அங்குசத்தால் குத்தி; திரித்து - திருப்பி. குத்திய - அங்குசத்தால் - திருகி என்றலுமாம்.
 
        மிறை - கொடுவினை. மிறைசெய்து காட்டுதல் - முன்னிலும் கொடியதாக ஏவுதல். "செய்வித்த தீய மிறைகள் எல்லாம்" (1402). மிறை - குறிப்பு என்றலுமாம்.
 
        வீசி - துதிக்கையினாற்பற்றி எறிந்து. ஈண்டு அவர் தங்களையே அவ்வாறு அரசைக் கொல் என்று ஏவிநெருங்கிய அவர் தம்மையே. ஏகாரம் தேற்றம். "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற முதுமொழிப்படி அவர்களே பட்டனர் என்பது.
 
        அமணர் மேல் எதிர்ந்து ஓடிற்று - என்க. ஏவச் செய்தவர் அவரென் றறிந்து அவரையும் அழிக்க அவர்மேல் எதிர்ந்து ஓடிற்று என்க.
 
        அஞ்சிய வேழம் - எதிர்த்தே - என்பனவும் பாடங்கள்.
118