1500.
"சித்த நிலாவுந் தென்றிரு வாரூர் நகராளும்
 மைத்தழை கண்ட ராதிரை நாளின் மகிழ்செல்வம்
 இத்தகை மைத்தென் றென்மொழிகேன்?" என் றருள்செய்தார்
"முத்து விதான மணிப்பொற் கவரி" மொழிமாலை.

235
 
        1500. (இ-ள்.) வெளிப்படை. "மனத்துள் நிலவும் தென் திருவாரூர் நகரை ஆளுகின்ற, நீலகண்டராகிய பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் மகிழ்வுடைய செல்வமானது இன்ன தன்மையுடையது, என்று என்ன சொல்வேன்!" என்று, "முத்து விதான மணிப்பொற்கவரி" என்று தொடங்கும் மொழி மாலையாகிய திருப்பதிகத்தினை அருளிச் செய்தனர்.
 
        1500. (வி-ரை.) சித்த நிலாவும் - உமது சித்தத்தில் பொருந்தும் எனவும், "அங்கு உள்ளம் வைத்து" (1495) என்றபடி அங்கு நின்றும் போந்தாலும் தமது மனம் அதனையே கொண்டுள்ளது எனவும், "பூதம் யாவையு முள்ளலர் போதென, வேத மூலம் வெளிப்படும்" (43) என்றபடி தேவர் முதலிய யாவடைய சித்தத்திலும் நிலாவுவது எனவும் உரைக்க நின்ற நயம் காண்க.
 
        தென் திருவாரூர் நகர் - திருவாரூர் நகருள் இறைவர் எழுந்தளிய பூங்கோயில் இருக்கும் பகுதி தென்றிருவாரூர் எனப்படும் என்ப. "தென்றிருவாரூர் புக், கெல்லை மிதித்தடியே னென்றுகொ லெய்துவதே" (நம்பிகள் - ஆரூர் - புற நீர்மை. 1) முதலிய திருவாக்குக்களும் காண்க. 1501-லும் இவ்வாறே கூறுவதும் காண்க. விறன்மிண்ட நாயனார் புராணத்திறுதியில் 631, 632 பக்கங்களில் அடிக்குறிப்புப் பார்க்க.
 
        ஆருர் நகர் ஆளும் - ஆளுதல் - விளங்கவீற்றிருந்து அங்குத் தம்மை அடைந்தாரைக் காவல் பூண்டருளுதல். "அமரர்நா டாளாதே யாரூ ராண்ட" (தாண்), "காவல்கொண்டு தனியாளும் கடவுட் பெருமான்"? "எல்லையிலா ஆட்சி புரிந்து" முதலிய திருவாக்குக்கள் பார்க்க.
 
        ஆதிசை நாளின் மகிழ் செல்வம் - நீர் வருநாளில் திருவாரூர் நிகழ் பெருமை உரைப்பீர்! என்று கேட்ட பிள்ளையாருக்கு அப்பெருமை - அங்கு நிகழ் பெருமை - யாவது திருவாதிரைத் திருநாளே யாகும் என்று குறிப்பித்து அதனைக் கூறத் தொடங்கினர்.
 
        செல்வம் - அருமைப்பாடும் சிறப்பும் குறித்தது.
 
        "இத்தகைமைத்து என்று என் மொழிகேன்?" - அச்சிறப்பினை யான் எவ்வாறு சொல்வேன்?; அது சொல்ல முடியாதபடி அத்துணைச் சிறப்பினது என்றபடி. "இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்?, அங்ங னிருந்ததென்றுந்தீ பற" என்ற ஞான சாத்திரமுங் கருதுக.
 
        என்மொழிகேன் என்று அருள் செய்தார் - மொழிமாலை - இது பதிகக் கருத்து ஆசிரியர் கண்டு காட்டியபடி. திருவாதிரைச் செல்வம் சொல்லுந் தரமன்று! ஆயினும் நீர் கேட்டருளியவாற்றால் சொல்லும் அளவில் இவ்வாறிருந்தது அச்செல்வம் என்றதாம்.
 
        "முத்துவிதானம் மணிப்பொற் கவரி" - என்று தொடங்கும் பதிகமாகிய மொழிமாலை என்க. இது பதிகக் தொடக்கம்.
 
        இப்பாட்டு அத்திருப்பதிக யாப்பில் அமைந்த கவிநயமும் காண்க.
 
        என்றுரை செய்தார் - என்பதும் பாடம்.
235
திருவாரூர் - திருவாதிரைத் திருப்பதிகம்
XIX திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்த னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்!

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே! பொன்னே! மைந்தா! மணாளா! வென்பார்கட்
கணியா னாரு ராதிரை நாளா லதுவண்ணம்!

2
துன்ப நும்மைத் தொழாத நாள்க ளென்பாரும்
இன்ப நும்மை யேத்து நாள்க ளென்பாரும்
நும்பி னெம்மை நுழையப் பணியே யென்பாரும்
அன்ப னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.

9
பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாட லாட லறாத செம்மாப்பார்ந்
தோரூ ரொழியா துலக மெங்கு மெடுத்தேத்தும்
ஆரூ ரன்ற னாதிரை நாளா லதுவண்ணமே!

10
திருச்சிற்றம்பலம்
 
        பதிகக் குறிப்பு :- ஆரூர்ப் பெருமானது திருவாதிரைத் திருநாளின் சிறப்புமுத்துவிதானம் நாற்றுதல், பத்தர்கள் சூழ்ந்தேத்துதல் முதலிய பெருமைகளையுடையது.
 
        பதிகப் பாட்டுக் குறிப்பு :- இறைவனது திருவிழாப் பெருமையினையும் சிறப்பினையும் செம்மைபெற எடுத்துக் கூறும் தனிப் பெருமையுடைய பதிகம் இது! ஒரு ஆசாரியர் இன்னொரு ஆசாரியர் கேட்க அருளியதும், அதனைக் கேட்டவுடனே அவர் விழாவைக் காணாவிடினும் விழாக்கொண்ட பெருமானைக் கண்டு சேவிக்கப் பிரிந்துசென்று மீண்டருளியதும் ஆகிய பெருஞ்சிறப்பும் உடையது. ஆளுடைய பிள்ளையாரது "மட்டிட்ட புன்னை" என்னும் திருமயிலைப் பதிகத்திற் காட்டப்பட்ட மண்ணினிற் பிறந்தார் பெறும்பய னிரண்டனுள், கண்ணினால் இறைவரது திருவிழாப் பொலிவுகண் டார்தல் ஒன்றாகும் என்பதறிவோம். இப்பதிகம் அத்திருவிழாவைக் காணும் வகையை அறிவிப்பது. இதனை யாவரும் பயின்று பயன்பெறக் கடவர்! (1) முத்து விதானம் - மூத்துக்கள் கட்டிய மேற்கட்டி. கவரி - வீசப்படுவது. பத்தர்களோடு பாவையர் சூழ - திருவிழாக்களில் ஆடவரும் மகளிரும் சேர்ந்து வணங்கும் முறை குறித்தது. பத்தர்கள் - ஆண் மக்களைக் குறித்தது. பலி - திருவிழாவில் எட்டுத்திசை காவலரை நோக்கி நாளிருபொழுதும் இடும் அட்டபலி. விரதிகள் - மாவிரதிகள். எலும்பு மாலை முதலியன அணிதலால் வித்தகக் கோலம் என்றார். இறைவர், மானக்கஞ் சாற நாயனாருக்கு அருள்புரிய வந்த திருக்கோலம் காண்க. மாவிரதம் - சைவத்தின் அகப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று. நாள் - வண்ணம் அது என்று கூட்டுக. பதிக முழுமையும் இவ்வாறு வினைமுற்றுப் பயனிலையால் முடிக்காது பெயர்ப் பயனிலைபெறக் கூறியது திருவிழாக் கண்டார்க்கு வினையில்லையாகும் என்பது குறிப்பு. - (2) நணியார் சேயார் - நணியாரும் சேயாரும். நணியார் - அணிமையில் உள்ளார். சேயார் - தூரத்தே உள்ளவர்கள். உம்மைத் தொகை. நணியார்களுள் திருநாள் காணப் பெறாதார் சேயார்களாக என்றும், சேயார்கள் அன்பினாற் கூடியவர் நணியார்களாக என்றும் உரைக்க நின்றது. பிணி - உடற்பிணி. உடலாகிய - பிறவியாகிய - பிணி என்றலுமாம். பிறங்கிக் கிடத்தல் - வரங்கிடத்தல். - (3) சாதிகள் - மணிகளுள் உயர்ந்தசாதி குறித்தது. ஒளிச்செறிவு - குற்றமின்மை - விளைவு முதலியவற்றாற் கணிக்கப்படுவது. விதானமும் வெண்குற்றமின்மை - விளைவு முதலியவற்றாற் கணிக்கப்படுவது. விதானமும் வெண் கொடியும் - இவை நகருக்கு மங்கலம் செய்தல் முன்னாள் வழக்கு. விதானமும் வெண் கொடியும் மில்லா ஊரும் ...... ஊரல்ல" (தேவா). - குணங்கள் - இறைவன் உயிர்களுக்குச் செய்யும் அருட்குணங்கள். அடியார் குணங்கள் என்றலுமாம். பிணங்கி ... பிதற்றுவார் - அன்பு மீதூர்ந்த நிலையில் செயல்கள். "பாலருட னுன்மத்தர் பிசாசர்குண மருவி" (சித்தி. 8. 32). இவை பத்தர் குணம். "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும் பன்னப்படுபவோ?". - (5) சங்கு - மங்கல முழக்குகளுள் ஒன்று. கல்ல வடம் - ஒருவகை வாச்சியம். கல்லலகு என்றும் வழங்கும். கலவ - கலாபம் - தோகையை - உடைய. கார் என்றெண்ணி - சங்கு - பறை - கல்லவடம் முதலியவற்றின் முழக்குக்கள் கூடுதலால் அது மேக ஓசைபோன்றிருத்தலின் மயில்கள் கார் என்று எண்ணின. "முழவதிர மழையென் றஞ்சி" (ஐயாறு. மேகரா - 1) என்றது பிள்ளையார் தேவாரம். களித்து வந்து - கார் காணக் களிப்பது மஞ்ஞை. அலமருதல் - துன்புறுதல். ஓசை கேட்டபோது எண்ணிய எண்ணம் வந்து பார்த்தபோது பிழைத்தமையின் அலமந்தன என்க. - (6) இப்பாட்டும் பத்தர்களது வசமிழந்த செயல்களைக் குறித்தது. - (7) (8) பத்தர் - பாவையர் (1) என்ற விடத்துரைத்தவை காண்க. திருவிழாவிற் பல பண்புடை மக்களும் ஆடவரும் ஆயிழையாரும் கூடிவழிபடுதல் கூறப்பட்டது. பொடிகள் - திருநீறு. கள் - பன்மை விகுதி சிறப்புக் குறித்தது. கற்பம் அநுகற்பம் முதலியன என்றலுமாம். - (9) தொழாதநாள் துன்பம் - ஏத்துநாள் இன்பம் - உடன் பாட்டிலும் எதிர்மறையினும் கூறியபடி. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே." நும்பின் எம்மை நுழையப் பணியே - உமது சிவஞான நெறியைப் பின்பற்றி ஒழுகி உம்மை அடையப் பணிப்பீர் - (10) பௌவப் பாரூரானை என்க. சேவிக்கும் உலகராகிய பௌவம் என்றலுமாம். செம்மாப்பு - சிறப்பு.
235