வேறு
2233."அவ்வினைக் கிவ்வினை" யென்றெடுத்த "தைய ரமுதுசெய்த
 வெவ்விட முன்றடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
 எவ்விடத் தும்மடி யாரிடர் காப்பது கண்ட" மென்றே
"செய்வினை தீண்டா திருநீல கண்ட" மெனச்செப்பினார்.
335
     2233. (இ-ள்.) அவ்வினைக்கு...எடுத்து - "அவ்வினைக்கு இவ்வினை" என்று தொடங்கி; "ஐயர்...கண்டம்" என்றே - முதல்வர் உண்டருளிய கொடியவிடத்தினைத் தடுத்து எமது துன்பங்களையெல்லாம் வராமற் காத்தது அவரது திருநீலகண்டமேயாம்" என்ற உறுதியிட்ட கருத்தினை வைத்து; செய்வினை...செப்பினார் "செய்வினைவந்து எம்மைத் தீண்டப்பெறா" என்று; "திருநீலகண்டத்தினிடம் ஆணை" என்று அருளிச் செய்தனர்.
335
     இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
     2233. (வி-ரை.) "அவ்வினைக் கிவ்வினை" என்பது பதிகத் தொடக்கம்; "செய்வினை தீண்டாதிரு நீலகண்டம்" என்பது முதற்பாட்டின் கருத்து (2233); "தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்" பதிகப் பாட்டுக்களின் மகுடம்.
     ஐயர்....கண்டம் - பதிகக்கருத்து. ஆசிரியர் கண்டு காட்டி யருளியபடி; ஐயர் - பெருமையுடையோர் - தலைவர். சாதிப் பெயராய் வழங்குதல் பிற்கால வழக்கு.
     அமுதுசெய்து வெவ்விடம் முன்தடுத்து - நீலகண்டத்தின் கருமை அவர் உண்டவிடந் தங்கியதனால் ஆகியது; தடுத்து - விடம்பரவித் துன்பம் செய்யாமல் தடுத்து; எம்மிடர் நீக்கிப் வெற்றி என்றது காண்க. உட்புகாமற் றடுத்து என்று புராண வரலாறுபற்றி உரைப்பது மொன்று; வெற்றியினால் - வெற்றியாவது அன்று தேவர்களைக் காத்தமைபோலவே இன்றுங் காத்து நிற்பதுவும், பேரிடரும் பிணியும் துன்பஞ் செய்யாமைக் காப்பதுவும் ஆம்; வெற்றி காரணமாக.
     எவ்விடத்தும்....கண்டம் - எவ்விடத்தும் - எத்தகைய பேரிடர் வந்த போதும்; இடத்தும் - இடமும் காலமும் குறித்தது.
     அடியார் இடர் தீர்ப்பது - அடியாராதலின்; "நாமடியோம்; செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா" என்றது பதிகம்.
     செய்வினை - நாம் செய்யும் வினையும், பிறர் நம்மாட்டுச் செய்வினையும்;
     திருநீலகண்டம் - இஃது தீண்டப் பெறாமை திருநீலகண்டத்தின் ஆணை என்றபடி. திருநீலகண்ட நாயனார் புராணம் பார்க்க. "தீண்டுவீ ராயினெம்மைத் திருநீலகண்டமென்றார்" (365); "ஆணைகேட்ட பெரியவர்" (366); ஆணைநிகழ் - (2234),
335
II. திருக்கொடிமாடச் செங்குன்றூர்     திருநீலகண்டப் பதிகம் (பொது)
திருச்சிற்றம்பலம் பண் வியாழக்குறிஞ்சி
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடியோம்;
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
(1)
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
(11)
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- எவ்விடத்தும் அடியாரிடர் காப்பது. திருநீலகண்டம் என்று ஆனையிட்டருளியது. ஆசிரியர் காட்டியருளியது 2233-ல் பார்க்க. இப்பதிகம் தீவினை வயத்தான் வரும் துன்பங்களெல்லாம் வராமற் காக்கும் பயனுடையது. இதனுள் ஒரு திருப்பாட்டுச் சிதலமாயழிந்தது! நளிர் சுரம் அடியாரை நலியாதபடி ஆணை தந்தருளினர்.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) அவ்வினை....அறிவீர் - துன்பானுபவம் முன்னைத் தீவினை வயத்தான் வருவதென்றும், அஃது அனுபவித்தன்றித் தவிர்க்கலாகா தென்றும் கூறும் அறிவுடையீர்களே; உய்வினை - அதனின்றும் உய்தி - தீர்வு - பெறும் வழி; கைவினை - கையினாற் செய்யும் தொண்டு - சரியை முதலாயின;- (2) கா - குளம் - இவை சிவனை நினைந்து சிவன் பொருட்டுச் செய்யும் பதிதருமங்கள். இவ்வாறு உயிர்களின் பொருட்டுச் செய்யப்படுவனவற்றி னின்றும் பிரித்துணரத் தக்கன. "காவளர்த்தும் குளந்தொட்டும்" (1301) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. கா - சோலை; இடுதல் - வைத்துக் காத்தல்; தொடுதல் - தோண்டுதல். இருபொழுதும் - வழிபடும் காலமுறை; பூவினைக் கொய்து - தாமே கொய்தல் முறை; கவினை இடுதல் - பூக்கொய்தற்கு - (3) போகங்கள் - பெண் போகம்; முலைத்தடம் - முலையாகிய தடம்; தடம் - உயர்வும் அகலமுமாம்; மற்றெவையும் - வேறு எல்லா வகையான போகங்கள்; "மடவாரோடும் பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும், பெருந்துணையை" (அரசு - தாண் - கோயில்). விலைத்தலை ஆவணம் கொண்டு - ஆவணத்தால் விலைப்படுத்தப்பெற்று. விலை செய்தல் - அப் போகங்களைத் தமது சிவபோகத்துக்கா விலை கொள்ளுதல். சிலைத்து - சினந்து.- (4) திண்ணிய - ஏனையோர்க்குத் திண்மையாகிய; - (5) கிற்றெமை ஆட்கொண்டு - வலிமையால் எம்மை ஆளாகக் கொண்டும்; சொற்றுணை வாழ்க்கை - சொல்லளவாய்க் கழிகின்ற வாழ்க்கை! "சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியே னுயப் போவதோர்சூழல்" (நம்பி -நெல் வாயிலரத் துறை - 1); துணை - அளவு; (6) வற்புறுத்தி - தவவலிமை பெற்றதாக்கி; பறித்தமலர் - தாமே பறித்த; "பூவினைக்கொய்து" (2); சிறப்பில் இத்தீவினை - சிறப்பினை இல்லையாகச் செய்யும்; சிறப்பிலி - சிறப்பில்லாதது - சிறப்பிலியாகிய தீவினை என்றலுமாம்.- (8) கரு - இனிப் பிறவிக்கு வித்தாகும் வினைகள். வாழ்க்கை கடிதல் - துறவு மேற்கொள்ளுதல். திருவிலித் தீவினை - சிவனடிமைத் திறத்தில் ஆகாவண்ணம் செய்யும் தீவினை. "உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத் திருவிலார்" (தேவா - பைஞ்).- (9) தோற்றம் - தொடக்கம்.- (10) இருதலைப் போகம் - இம்மை மறுமையின்பங்கள். பற்று - உலகப்பற்று; இல்லறப் பற்று.- (11) பிறந்தபிறவி - பெறுதற்கரிதாக மக்களுட் பிறந்த பிறப்பு. இறத்த பிறவி - துறந்தார். "செத்தாரைப் போலே திரி"; நிறைந்தவுலகு - சிவனுலகு.
     தலவிசேடம் : - திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) - இது கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்கள் ஏழனுள் நான்காவது. அந்நாட்டில் காவிரிக்கு வடபுறம் (கீழ்புறம்) உள்ளது இஃது ஒன்றே; ஏனையவை காவிரிக்குத் தென்புறம் உள்ளன. திருச்செங்கோடு என்று விளக்கமாய் வழங்கப்படுவது மலை
யின் வடிவம் நோக்கி நாககிரி - நாகாசலம் எனவும் வழங்குவர்; நாகம் (ஆதிசேடன்) பூசித்த தல வரலாறும் உண்டு. பிரமன் - விட்டுணு - துர்க்கை - கந்தர் பூசித்த வரலாறுகளும் உண்டு. இது முருகனுக்குச் சிறப்பாயுரிய குன்று தோறாடல்களுள் ஒன்று. திருப்புகழ் பெற்றது. இத்தலத்து எழுந்தருளிய செங்கோட்டு வேலரது அழகின் பெருமை பற்றிச், "செங்கோடனைக் கண்டுதொழ, நாலா யிரங்கண் படைத்தில் னேயந்த நான்முகனே" என்று பாராட்டினர் அருணகிரியார்; மாதொருபாகர் என்று விளக்கமாய்ச் சைவத்திறத்தில் வேத சிவாகமங்களாலும், மாபுராணங்களாலும் பேசப்பட்ட "தொன்மைக் கோலமே" இங்கு எழுந்தருளிய திருமூலட்டானனாருடைய திருவுருவமாகும் தனிச் சிறப்புடைய தலம். மலைமேல் உள்ள தலம்; மலையில் பல அரிய தூய நீர்நிலைகள் உள்ளன. அதிசயங்களும் அனேகமுள்ளன. இங்குப் பரிசனங்கள்பாலும் நாட்டினர்பாலும் முடுகிய நளிர்சுரத்தை ஆளுடைய பிள்ளையார் பதிகம் பாடிப் போக்கியருளிய வரலாறு முன்னர்ப் புராணத்துட் காண்க. போதாயன சூத்திரம் காசிய கோத்திரத்தில் காசித் தலபுராணம் பாடிய சங்கர நாராயணவையர் மகன் கவிராச பண்டிதர் இத் தலபுராணம் பாடியுள்ளார். அதற்குச் சிற்றம்பல உபாத்தியாயர் (ஏர் விளம்பி - ஆவணி - 14-ந்தேதி திங்கட் கிழமை - அமர பக்கம் பதின்மூன்றாந் திதி பூசம் கூடிய நன்னாளில் தொடங்கி எழுதிய) உரையுடன் கி.பி. 1876 ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது. பருவத காண்டம் (அர்த்த நாரீசர் பெருமை கூறுவது); காந்த காண்டம் (முருகன் பெருமை கூறுவது); தீர்த்தகாண்டம் (சுனைகளின் பெருமைய கூறுவது); என்று மூன்று காண்டங்களை யுடையது. வடமொழி மான்மியத்தின் வழித்தாகலின் இப்புராணத்துள் ஆளுடைய பிள்ளையார் அருள்பற்றிய வரலாறு பேசப்படவில்லை. மகப்போறு முதலிய வரங்கள் தரும் வறடிக்கல் (வந்திய - பாடாணம் என்பர் வடவர்) என்ற சிகரம் ஒன்று இன்றும் விளக்கமாய் வழிபடப் படுகின்றது. சுவாமியும் அம்மையும் - அர்த்தநாரீசர்; மாதிருக்கும் பாதியன்; கந்தர் - செங்கோட்டுவேலர்; தீர்த்தம் - குமார தீர்த்தம்; நாக தீர்த்தம்; சிவதீர்த்தம் முதலிய சுனைகள்; பதிகங்கள், தலப்பதிகம் 1. பொதுப் பதிகம் 1.
     இது சங்ககிரி துருக்கம் என்ற நிலையத்தினின்றும் தென் கிழக்கில் கற்சாலை வழி 5 நாழிகையில் அடையத்தக்கது. எல்லா வசதிகளும் உண்டு.