574.
பாய்தலு மிசைகொண் டுய்க்கும் பாகரைக் கொண்டு
                                    சீறிக்
காய்தழ லுமிழ்கண் வேழந் திரிந்துமேற் கதுவ,
                                   (வச்சந்
தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே!), தகைந்து
                                   பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ மழுவினாற் றுணித்தார்
                                தொண்டர். 24

     (இ-ள்.) வெளிப்படை. பாய்ந்த உடனே, மேலிருந்து
செலுத்துகின்ற பாகரை மேற்கொண்டும், சீறிக் காயும் நெருப்பினை
உமிழும்படி சிவந்த கண்ணுடன் அவ்வியானை, திரிந்து இவர்மேற்
பாய்ந்துதாவ, அதனை மறித்துப், பாய்ந்து நிலந்தோய நீண்ட அதன்
ஒப்பற்ற பெரிய துதிக்கை வீழும்படி தொண்டர் மழுவினாலே
துணித்தார். தாயினது தலையன்பின் முன்னே அச்சம் எதிர்த்து நிற்க
வல்லதோ? (நில்லாது).

     (வி-ரை.) மிசை கொண்டு உய்க்கும் பாகர் - மேலிருந்து
யானையைச் செலுத்தும் கடமைபூண்ட பாகர். தன்னை வசப்படுத்திச்
செலுத்தும் பாகர் தன் மேலிருந்தும் அவர்களால் அடக்கப்பெறாது.
சிறப்பும்மை தொக்கது.

     தழல் உமிழ் கண் வேழம் - யானையினது இயல்பாற் சிவந்த
கண் கோபத்தாற் பின்னும் மிகச் சிவந்ததனைத் தீ உமிழ்வது
போன்றதென்றார். கோபாத்தாற் கண்கள் தீப்பொறி பறக்க என்பது
மரபும் வழக்குமாம். நாயனார் நெருப்புயிர்த் தழன்று பொங்கிப்
பாய்ந்ததற்கெதிர் யானையும் கண் தழல் உமிழ்ந்து கதுவஎன்க.

     திரிந்து - முன் செல்கை தவிர்ந்து நாயனார் மீது திரும்பி.
கதுவ - எதிர்த்துக் கைசுழற்றித் தாவ.

     அச்சம் தாய் தலையன்பின் முன்பு நிற்குமே? இது
கவிக்கூற்று. அச்சம் - யானை தம்மீது தாவிப் பாய்கின்றதனால்
தம்முயிர்க் கிறுதி நேரிடும் என்ற அச்சம். தாய் தலையன்பு -
தாயின் தலையன்பு போன்ற தலையன்பு. இங்கு அடியார் பணிக்கு
வரும் முட்டுப்பாட்டை நீக்குதலின் வைத்த தலையன்பினைக்
குறித்தது. நிற்குமே - ஏகாரம் நிற்காது என எதிர்மறைப் பொருளில்
வந்தது. குழவியைக் காக்கும் தாய் அச்செயலிலே தனக்கு நேரிடும்
அபாயத்தையும் நோக்காது விரைகின்றது போல இங்குத் தம்
முயிர்க்குவரும் இடரையும் நோக்காது அன்பு மீதூர்ந்து பாய்ந்தனர்.
அச்சம் அன்பின் முனனே முனைந்து நிற்கலாற்றாது அதனால்
விழுங்கப்பட்டது என்க. அன்பு அச்சத்தை மேலிடும் என்பது
நூற்றிணிபு. இதற்கு இவ்வாறன்றி அடியார்க்குத் தாயினுமினிய
இறைவனது அன்பின் முன் யானையினது பகைமை என்ன செய்ய
வல்லது? முன்னிற்குமோ? என்று பொருள் கூறுவாருமுளர். அது
பொருந்தாமை யுணர்க. தாய் என்றதற்குத் தாய்ப் பசு
என்றுரைப்பாருமுளர். தகைந்து பாய்ந்து - தம்மேற் பாயும்
யானையை மறித்துத் தாம் அதன்மேற் பாய்ந்து.

     தோய் - துதிக்கை நிலந்தோய நீண்டு வளர்ந்திருத்தல்
உத்தம யானையினிலக் கணம் என்பர். கால்கள் நான்கும், பீசம் -
கை - என்றவையும் ஆக ஆறு அங்கங்கள் நிலந்தோய்தல்
யானைக்கு உயர்ந்த இலக்கணமாம் என்ப.

     தனி - ஒப்பற்ற. தடக்கை - பெரிய துதிக்கை.

     தடக்கை வீழத் துணித்தார் - கையினைத் துணித்த காரணம்
முன்னர் உரைக்கப்பட்டது. துண்டித்துக்கொல்வேன் என
மேற்பாட்டிற் கூறியது காண்க. கைதுண்டிக்கவே யானை இறந்துபடும்
என்பதாம்.

     காய் கனல் - என்பதும் பாடம். 24