575.
கையினைத் துணித்த போது கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம் புரண்டிட, மருங்கு வந்த
வெய்யகோற் பாகர் மூவர் மிசைகொண்டா ரிருவ ராக
வைவரைக் கொன்று நின்றா ரருவரை யனைய
                                தோளார்.  25

     (இ-ள்.) வெளிப்படை. துதிக்கையினைத் தொண்டர்
துணித்தபோது கடல் போலக் கதறிக் கீழேவீழ்ந்து கரியமலை
போன்ற அவ்வியானை புரள, அதன் பக்கத்தே வந்த வெவ்விய
குத்துக்கோற்பாகர் மூவரும் யானைமேலிருந்து செலுத்திய பாகர்
இருவருமாக ஐவரையும் அரியமலைபோன்ற தோளுடைய நாயனார்
கொன்று நின்றார்.

     (வி-ரை.) கடலெனக் கதறி - கடல்போல இரைத்து.
மலைபோன்ற யானை கடல்போலக் கதறிற்று என்ற நயமுங்காண்க.
ஒரே பொருள் உருவத்தால் மலையும் ஓசையினால் கடலும்
போன்றதென்க.

     புரண்டிட - கை துணிப்பட்டமையால் இறக்கின்ற யானை
மரண வேதனையாற் புரண்டது என்க. "பட்டவர்த்தனமும் பட்டு"
என்று வரும் பாட்டிலும், களிறு பாகர் மடியவும்" (595) எனவும்,
"உறங்கிமீ தெழுந்த தொத்து" (601) எனவும் கூறுவனவற்றால்
இச்செயலினால் யானை இறந்துபட்டதென்பது துணியப்படும்.

     மருங்கு வந்த வெய்ய கோற்பாகர் - யானைக்குமுன்
ஒருவனும், இருபக்கங்களில் இருவருமாக மூவர் பாகர்கள்
குத்துக்கோலுடன் யானையோடு வருவது வழக்கு. குத்துக்கோல்
முன்னும் பக்கத்தும் வருவாரை விலக்கவும், யானையை
வழிப்படுத்தவும் உதவுவதாம். பெரிய மதயானையையும் குத்தி
வசப்படுத்தும் கோலாதலின் வெய்ய கோல் என்றார். இவர்களும்
யானையை நேர் செலுத்தும் கடன் பூண்டாராதலின் பாகர்
எனப்பட்டார்.

     மிசை கொண்டார் - "மிசை கொண்டுய்க்கும் பாகர்" என்றது
மேற்பாட்டு.

     ஐவரைக் கொன்றார் - அருவரை யனைய தோளார் என்ற
சொன்னயமும், பொருணயமும், கொல்வதற்குத் துணைக்காரணம்
தோள் என்று குறித்த சதுரப்பாடும் காண்க.

     கொன்று நின்றார் - இதுவரை சலியாது பாய்ந்த நாயனார்
தமது செயல் முற்றிய பின்னரே நின்றனர் என்றது குறிப்பு. 25