582.
தூரியத் துவைப்பு முட்டுஞ் சுடர்ப்படை யொலியு
                                  மாவின்
றார்மணி யிசைப்பும் வேழ முழக்கமுந் தடந்தேர்ச்
                                  சீறும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பு மிக்கெழுந் தொன்றா                                   மெல்லைக்
காருடன் கடைநாட் பொங்குங் கடலெனக் கலித்த                                   வன்றே. 
32

     582. (இ-ள்.) வெளிப்படை. வாத்திய ஓசையும், தாக்குகின்ரு
ஒளியுடைய படைக்கலங்களின் ஒலியும், குதிரைகளின் கழுத்துமாலை
மணிகளின் சத்தமும், யானைகளின் முழக்கமும், பெரிய தேர்களின்
ஆரவாரமும், படைவீரர்களின் ஆர்ப்பும், மிகவும் கிளம்பி, எழுந்து,
ஒனறாகக் கூடியபோது ஊழிக்காலத்திலே, ஊழிப்பெரு மேக
முழக்குடனே பொங்கும் கடல்போலச் சத்தம் பெருகின. 32

     இவ்வைந்து பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.
இவ்வாறன்றி 580-ல் எங்குமெங்கும் என்றதனை அடுக்காக்கி
எங்கெங்கும் என்று கொண்டு முன் மூன்று பாட்டுக்களை ஒரு
முடிபாகவும், பின் இரண்னை ஒரு முடிபாகவும் உரைப்பாருமுண்டு.
அரசர் எழவே சேனையும் எழுந்தன எனப் பிரிவின்றிக் கொள்ளும்
முறையின் றொடர்பா யமைதலின் ஒரு முடிபாகக்
கொண்டுரைக்கப்பட்டது.

     582. (வி-ரை.) தூரியம் - வாத்தியப்பொது. மேற்பாட்டிற்
கூறிய இயங்களையும் குறித்தது. துவைப்பு - ஓசை. கைகளாலும்
கோல்களாலும் குறிப்பிட்டவாறு ஓசையுண்டாக்குதலால் துவைப்பு
என்றார். துவைத்தல் - முழக்குதல்.

     முட்டுஞ் சுடர்ப்படை ஒலி - படை - மேல் 580 - ம்
பாட்டினில் விரித்த பலவகைப் படைகள். செறிவினாலும்
எறிவினாலும் முட்டுவதால் முட்டும் - என்றார். இவற்றினின்றும்
வெளிவீசும் ஒளியே பகைவரை முட்டுவதால் முட்டும் சுடர்ப்படை
என்றலுமாம். முட்டும்படை - முட்டும் சுடர் - முட்டும் சுடர்ப்படை
என மூன்று வகையானும் கூட்டியுரைக்க நின்றது.

     மாவின் தார்மணி இசைப்பு - மா - குதிரை. மணித்தார்
என மாற்றுக. மணிகளை மாலையாகக் கோத்தணிதல் வழக்கு -
இசைத்தலால் எழும் ஓசை இசைப்பு.

     வேழ முழக்கம் - பேரொலியாதலின் முழக்கம் என்றார்.
சீறு
- ஒலி. சீறி எழுதலான் உளதாம் ஓசை சீறு எனப்பட்டது. சீரும்
என்று பாடங்கொண்டு இரைச்சல் எனப் பொருள் கொள்வாருமுண்டு.

     செருக்கு - தாம் ஏந்திய படையினாலும் தமது
ஆண்மையினாலும் செருக்குமிக்கார். வீராவேசம் என்பர்.
செருக்கினாற் கூறும் வீரமொழிகளின் ஒலி என்பாருமுண்டு. ஆர்ப்பு
- ஆரவாரம். ஒலி.

     துவைப்பு - ஒலி - இசைப்பு - முழக்கம் - சீறு - ஆர்ப்பு
என்பன ஓசை என்ற ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
ஒருபொருட்பன்மொழி என்பர். வெவ்வேறு வகையாலெழும்
வெவ்வேறு வகை ஓசைகளைக் குறிக்க வெவ்வேறு சொற்களால்
அவ்வவற்றிற்குரிய குறிப்பும் பெற அமைத்துக் கூறிய அழகு காண்க.
கண்ணப்பர் புராணத்து "ஐவனவடிசில்" என்ற 34-ம் பாட்டும்,
இவ்வாறு வருவன பிறவும் காண்க.

     மேல் மூன்று பாட்டுக்களிலும் தனித்தனி கூறிய
படையெழுச்சியின் மூட்சியை இப்பாட்டாற் றொகுத்துக் கூறியபடி.
இதில் தூரியம் மேற்பாட்டிலும், படைகள் அதற்கு மேற்பாட்டிலும்,
மா - வேழம் - தேர் இவை அதற்கு மேற்பாட்டிலுமாக எதிர் நிரன்
முறையா யமைந்ததும் காண்க. தேரும் மாவு மிடையிடை களிறும்
(579) என்றதில் இடையிடை களிறு என்றதனால் தேர் - களிறு - மா
என்றதே வரிசையாயிற்று. ஆதலின் இங்கு அது மா - வேழம் -
தேர் என்று எதிர் நிரனிறையாயினமை கண்டு கொள்க.

     ஆர்ப்பு - ஏனை ஓசைகள் யாவும் ஓசை அளவில் 
எழுந்தனவாதலின் முன்னர்த் தொகுத்துக் கூறினார். படைஞர்
ஆர்ப்பு அவ்வாறன்றி அவர்களது மன எழுச்சியாலாகிய செருக்குக்
குறித்தெழுந்த மொழிகளாதலின் அச்சிறப்புப் பற்றி இறுதியில் வேறு
பிரித்துக் கூறிக் காரணமுங் கூறினார்.

     அவ்வச் சேனை வகைகள் வெவ்வேறாக அமைந்த தத்தம
திடங்களினின்றுங் கிளம்பும் எழுச்சியைத் தனித்தனி முன்குறித்த
பாட்டுக்களானும், அவை ஒன்று கூடிய துழனியை இப்பாட்டானுங்
கூறினார். அவற்றை முன்னர்த் தனித்தனிக் கண்ட ஒருவன் அவை
தொக்க சிறப்பைக் கூட்டி எண்ணுங்கால் இறுதியில் வந்து கூடிய
இனத்தை முதலாக வைத்து அம்முறையே எண்ணுதல் வழக்காதலின்
எதிர் நிரன் முறையாகக் கூறினார் என்க. இக்கருத்துப் பற்றியே
மிக்கு எழுந்து ஒன்றும் எல்லை என்றதும் காண்க.

     ஒன்றும் எல்லை - ஒன்றாகும்போது கூடியபோது.
எல்லைக்கார் என்று கூட்டி ஊழிக்கால முகில்கள் என்பாரு
முண்டு.

     காருடன் கடைநாட் பொங்கும் கடல் - ஊழி முடிவில்
நீர்ப் பிரளயத்துப் பொங்கும் கடலின் எழுச்சி. "பொங்கோதங்
கடைநாள்", "கடையுகத்திற் றனிவெள்ளம் பல" எனத்
திருஞானசம்பந்த நாயனார் புராணத்துக் கூறுதலும், பிறவுங் காண்க.
வரும் பாட்டில் "இறுகால்" என்றதுமிது. காருடன் - ஆயின்
இவ்வெழுச்சி கடற்பெருக்குப் போல அழிவின்றி செல்லாது "ஆர்கலி
யேழு மொன்றாய் மன்னிய ஒலியின் ஆர்த்து, மண்ணெலா மகிழ்ந்து
வாழ்த்தச்" (603) செய்து மகிழ்ச்சிக்கே காரணமாய் நின்றதாதலின்
கடைநாட் பொங்கும் கடல் என்றொழியாது உலக
நிலைபேற்றுக்கும் மகிழ்ச்சிக்கும் காரணக்குறிப்போடு காருடன்
என்று உடன் கூட்டிக் கூறினார். "வீழ்க தண்புணல்" என்ற
பெருவாக்கினால் கார் வாழ்த்துதற்குரியதாயினமை காண்க.

     கலித்த - சத்தித்தன. இப்பாட்டின் உவமான உவமேயங்
கூட்டி எழுவகைச் சத்தங்களாயின. சேனை எழுதலின்
எழுவகையாயின வென்பதும் குறிப்பு.

     இக்குறிப்புப் பற்றிப் பின்னர் ஆர்கலி ஏழும் ஒன்றாய் -
(603). என்பதும் காண்க.

     அன்றே - தந்திரத் தலைவர் சாற்றிய (579) அப்போதே -
அன்று - ஏ - அசையென்றொதுக்குவாரு முளர்.

     துவைப்ப - அசைப்பும் - என்பனவும் பாடங்கள். 32