590.
மன்னவன் றன்னை நோக்கி வானவ ரீசர் நேசர்
"சென்னி!யித் துங்க வேழஞ் சிவகாமி யாண்டார்
                                 கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித்
                                 தாமந்
தன்னைமுன் பறித்துச் சிந்தத்தரைப்படத்துணித்து 
                               வீழ்த்தேன்;
40

     590. (இ-ள்.) வெளிப்படை. தேவதேவரது அன்பராகிய
எறிபத்தர் அரசரைப் பார்த்துச், "சென்னியே! சிவகாமியாண்டார்
இறைவனுக்குச் சாத்தும் பொருட்டுக் கொய்து கொண்டு வந்த
திருப்பள்ளித்தாமத்தை, முன்னே, இந்தப் பெரிய யானை பறித்துச்
சிந்தியதனாலேஅதனை நிலத்தில் வீழும்படித் துண்டித்து
வீழ்த்தினேன், 40

     590. (வி-ரை.) வானவர் ஈசர் - தேவர்க்கெல்லாம்
பெரியாராகிய மாதேவர். "யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்,
மாதே வன்னலாற் றேவர்மற்றில்லையே" - என்பது அப்பர்
சுவாமிகள் திருவாக்கு.

     (ஈசர்) நேசர் - அவர்பால் அன்பு வைத்தவர். நேசம் -
அன்பு. குழையணி காதினானுக் கன்பர் - (587), அம்பலவாண
ரன்பர்
(588) எனமுன்னர்க் கூறியதற் கேற்ப இங்கு ஈசர்நேசர்
என்றார்.

     சென்னி - சோழர்களது மரபுக்குரிய பெயர். சோழர்கள்
வழிவழியாய்ச் சிவனடி சென்னி சேர்த்திய மரபினர்; ஆதலின்
சிவாபசாரம் நிகழவொட்டார் என்னும் அக்குறிப்புப் பெறச் சென்னி
என்றார். "சென்னிவளர் மதியணிந்த சிலம் பணி சேவடியார்தம் -
மன்னிய சைவத்துறையின் வழிவந்த குடிவளவர்" - என்ற
திருஞானசம்பந்த நாயனார் புராணங் (2) காண்க.

     துங்கவேழம் - பெரிய யானை - உயர்ந்த யானை
என்றலுமாம்.

     பன்னகாபரணர் - பன்னகம் - பாம்பு - பாம்புகளை
அணியாக அணிந்தவர், சிவபெருமான். "ஆர்த்திட்டதும் பாம்பு
கைக்கொண்டதும் பாம்பு" (நம்பிகள் தேவாரம்,
திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும் 1), "ஆரமாவது நாகமோ
சொலும்" - (அவரது - திருப்பைஞ்ஞீலி - 1) முதலிய
திருவாக்குக்கள் காண்க. "குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பு"
(திருக்கோவையார் - 21) என்றபடி யானையையும் கட்டியிடவல்ல
பாம்புகளை அணியாகப் பூண்டவர்க்குச் சாத்தும் மலரை யானை
பறித்துச் சிந்தியது என்றதொரு குறிப்பும் காண்க.

     முன் பறித்துச் சிந்த - "பிடித்து முன் பறித்துச் சிந்த" -
563 என்றதுகாண்க. முதலில் பறித்துப் பின்னர்ச் சிந்தியது.
பறித்தற்குக் காரணமாக வேறொன்றும் நிகழாதிருப்பவும் தானே
முன் பறித்தது என்பது குறிப்பு.

     தரைப்படத் துணித்து - அபராதம் செய்த அதன் துதிக்கை
துணிபட்டு நிலத்தில் விழும்படி துணித்து. 574 பார்க்க.

     வீழ்த்தேன் - தாம் செய்த செயலை ஏற்று அஞ்சாது
எடுத்துச் சொல்லும் வீரங் காண்க. 40