முட்டாது மலரிடுதலாவது, விதிப்படி இடைவிடாமல் அருச்சித்தல். "நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும் முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்ய" என்ற ஞானசம்பந்தர் தேவாரமும் இதனையே வற்புறுத்துகிறது. அடியார் நடுவுள்ளிருப்பதையே பெருஞ்செல்வமாகக் கருதுவர் பெரியோர் ஆதலால், ‘அன்பருள்ளாம் சிவமே பெறுத்திரு’ என்றார். ‘அடியேன் உன் அடியார் நடுவுள்ளிருக்கும் அருளைப் புரியாய்’ என்று அடிகள் பின்னரும் கூறுவார். இம்மூன்றும் இறைவனையடைவதற்குரிய சாதனங்களாகும். தமக்கு இம்மூன்றும் இன்மையால், ‘அருவினையேன்’ என்றார். தவம் முதலிய செய்தற்குரிய பிறப்பு வேண்டும் என்பார், "பவமே அருளு கண்டாய்" என்று வேண்டுகிறார். இதனால், தவம் புரிதல் முதலிய செயல்களைச் செய்து பரம் பொருளாகிய சிவத்தையடைய வேண்டுமென்பது கூறுப்பட்டது. 5 பரந்துபல் லாய்மலர் இட்டுமுட் டாதடி யேயிறைஞ்சி இரந்தவெல் லாமெமக் கேபெற லாம்என்னும் அன்பருள்ளம் கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தர மாவரு ளாய்நின்னை யேத்த முழுவதுமே. பதப்பொருள் : பரந்து - பல தலங்களிலும் சென்று, பல் ஆய்மலர் - பலவாகிய ஆராய்ந்தெடுத்த மலர்களை, இட்டு - தூவி அருச்சித்து, முட்டாது இறைஞ்சி - இடைவிடாது வணங்கி, இரந்த எல்லாம் - வேண்டினவெல்லாம், பெறல் - பெறுதல், எமக்கே ஆம் - எமக்கே கூடும், என்னும் - என்கிற, அன்பர் - அன்பரது, உள்ளம் - மனத்தில், கரந்து நில்லா - மறைந்து நில்லாத, கள்வனே - கள்வா, முழுவதும் - வாழ்நாள் முழுவதும், நின்னை ஏத்த - உன்னை துதிக்க, எனக்கும் - அடியேனுக்கும், நின்றன் - உன்னுடைய, வார்கழற்கு - நெடிய கழலையணிந்த திருவடிக்கண் செய்ய வேண்டிய, அன்பு - அன்பை, நிரந்தரமா - எப்பொழுதும் அருளாய் - அருள் புரிவாயாக. விளக்கம் : பல் மலர் என்றது, கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்பனவற்றை. ஆய்மலர் என்றது விலக்கியன ஒழித்து விதித்தன தெரிந்தெடுத்த மலரை. அன்பர் மனத்து வெளிப்பட்டும், அன்பரல்லார் மனத்துக் கரந்தும் நிற்றலால், இறைவன் கரந்து நில்லாக் கள்வனாயினான். இறைவனை வழிபாடு செய்தற்கு அன்பு வேண்டும். வழிபாடு காரியம் : அன்பு காரணம். காரியமாகிய வழிபாட்டைச் செய்யக்
|