135


காரணமாகிய அன்பை அருள வேண்டும் என்பார், ‘அன்பெனக்கு நிரந்தரமா அருளாய் நின்னையேத்த’ என்றார்.

இதனால், இறைவனை அடைதற்கு இடையறா மெய்யன்பு வேண்டும் என்பது கூறப்பட்டது.

6

முழுவதும் கண்டவ னைப்படைத் தான்முடி சாய்த்துமுன்னாள்
செழுமலர் கொண்டெங்கும் தேடஅப் பாலன்இப் பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதியிலியாய்
உழுவையின் தோலுடுத் துன்மத்த மேல்கொண் டுழிதருமே.

பதப்பொருள் : முழுவதும் - எல்லாப் பொருள்களையும், கண்டவனை - படைத்தவனாகிய பிரமனை, படைத்தான் - தான் உந்திக் கமலத்தில் தோற்றுவித்த திருமால், முன் நாள் - முற்காலத்தில், முடியசாய்த்து - தலையை வளைத்து, செழுமலர், கொண்டு - வளமிக்க பூக்களைக் கைக்கொண்டு, எங்கும் தேட - எவ்விடத்தும் தேடாநிற்க, அப்பாலன் - அப்பாலாயிருந்தவனாகிய, எம்பிரான் - எம்பெருமான், இப்பால் - இவ்விடத்தில், காட்டிடை - சுடுகாட்டில், கழுதொடு - பேய்களோடு, நாடகம் ஆடி - கூத்தாடி, கதி இலியாய் - ஆதரவில்லாதவனாய், உழுவையின் தோல் உடுத்து - புலியின் தோலை ஆடையாக உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு - மிக்க களிப்பை மேற்கொண்டு, உழிதரும் - திரியாநிற்பன்.

விளக்கம் : உலகத்தைப் படைத்தவன் பிரமன்; பிரமனைத் தோற்றியவன் திருமால்; அவ்வளவு சிறப்புடைய திருமாலால் இறைவன் திருவடியைக்கூடக் காண இயலவில்லை என்பார், "முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடியசாய்த்து எங்கும் தேட அப்பாலன்" என்றார். ஆனால், மனிதரிலும் இழிந்த பிறவியாகிய பேயோடு, எல்லோராலும் வெறுக்கத்தக்க சுடுகாட்டில், யாவரும் காண ஆடுகின்றான் என்பார், ‘கழுதொடு காட்டிடை நாடகமாடி’ என்றார்.

தாருகாவன முனிவரால் அனுப்பப்பட்ட புலியைக் கொன்று அதன் தோலையுரித்து இறைவன் ஆடையாகக் கொண்டான் என்பது உழுவையின் தோலுடுத்த வரலாறு. தனக்கென ஆடையின்றிப் புலியின் தோலை ஆடையாகக் கொண்டான் என்று இகழ்வது போல இறைவன் பெருமையைக் கூறினார்.

இதனால், அன்பில்லாதார்க்கு அருமையானவன் என்றும், அன்புடை யார்க்கு எளிமையானவன் என்றும், இறைவனது அருமையும் எளிமையும் கூறப்பட்டன.

7

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது வந்தற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே.