136


பதப்பொருள் : உழிதரு காலும் - அசையும் தன்மையுடைய காற்றும், கனலும் - நெருப்பும், புனலொடு - நீரோடு, மண்ணும் விண்ணும் - பூமியும் ஆகாயமுமாகிய ஐம்பூதங்களும், இழிதரு காலம் - சூக்கும நிலையினின்று தோன்றுகின்ற காலம், எக்காலம் வருவது - எப்பொழுது வருகின்றதோ, அப்பொழுது அந்தக் காலமுமாய், வந்தற்பின் - அக்காலம் வந்ததற்குப்பின், உழி தரு காலத்த - அப்பொருள்களெல்லாம் உலாவுகின்ற நிலைப்புக் காலமுமாய் இருப்பவனே, பின்னும், உன் அடியேன் செய்த வல்வினையை - உன்னுடைய அடியவனாகிய யான் செய்த வலிய வினையை, கழிதரு காலமுமாய் - நீக்குகின்ற இறுதிக் காலமுமாய், அவை காத்து - அவ்வினைகள் தொடராதபடி தடுத்து, எம்மைக் காப்பவனே - என்னைப் போன்ற அடியவர்களை உன் திருவடியில் வைத்துக் காக்கின்றவனே, நீயே எனக்குப் புகலிடம்.

விளக்கம் : இழிதரு காலம், உழிதரு காலம், கழிதரு காலம் என்பன முறையே படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்யும் காலத்தைக் குறித்தன. அருளள் தொழில் இங்கு அழித்தலில் வைத்துக் கூறப்பட்டது. எல்லாச் செயல்களையும் கால தத்துவத்தின் வழியாகவே இறைவன் இயற்று கின்றான். ஆகையால், காலங்களாய் இருக்கும் நிலையையே எடுத்துக் கூறினார். ‘காலமும் கடவுள் ஏவலால் துணைக் காரணம் காண்’ என்ற சிவஞான சித்தி காண்க. இவை அனைத்தையும் இறைவன் செய்வது உயிர்கள்பொருட்டே என்பார் ‘அவை காத்து எம்மைக் காப்பவனே’ என்றார். இறைவன் எல்லா உயிர்களுடைய வினையையும் நீக்கியருளுபவனாயினும் அதனை அடிகள் தமக்குச் செய்கின்றமையைச் சிறப்பாக நினைத்து ‘உன்னடியேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமுமாய்’ என்றார். நீயே எனக்குப் புகலிடம், என்பது இசையெச்சம்.

இதனால், இறைவனுடைய எல்லாம் வல்ல தன்மையும் அருள் நிலையும் கூறப்பட்டன.

8

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான்என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நானடி யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே.

பதப்பொருள் : பவன் எம்பிரான் - எல்லாம் தோன்றுதற் கிடமான எம் பெருமான், பனிமாமதிக் கண்ணி - குளிர்ந்த சிறப்புடைய பிறையைத் தலைமீது கண்ணியாக அணிந்த, விண்ணோர் பெருமான் - தேவர் தலைவன், சிவன் எம்பிரான் - இன்ப வடிவினனாகிய எம் தலைவன், என் சிறுமை கண்டும் - என் இழிவை அறிந்தும், என்னை ஆண்டுகொண்டான் -