139


பதப்பொருள் : எம் உடையானே - எம்மை அடிமையாக உடையவனே, நான் - நான், நாடகத்தால் - போலியாக, உன் அடியார் போல் - உன் மெய்த்தொண்டர் போல, நடுவே - அம்மெய்த்தொண்டர்களுக் கிடையே, நடித்து - தோற்றம் காட்டி, வீடு அகத்தே புகுந்திடுவான் - முத்தியுலகத்திற்புகுதற்கு, மிகப் பெரிதும் விரைகின்றேன் - மிகப் பெரிதாகவும் விரையாநின்றேன்; ஆதலால், சீர் - சிறப்பு வாய்ந்த, ஆடகக் குன்றே - பொன் மலையே, மணிக்குன்றே - மாணிக்க மலையே, உனக்கு - உன்னிடத்து, இடையறா அன்பு - எப்பொழுதும் நிகழும் அன்பினை, என் அகத்தூடு - என் நெஞ்சினூடே, நின்று - நிலைத்து நின்று, உருக - அதனால் என் நெஞ்சம் உருகும் வண்ணம், தந்தருள் - உதவியருள்வாயாக.

விளக்கம் : நாடகத்தில் நடிப்பவர்களது நடிப்புகள் அவர்களது மனத்தோடு பொருந்தாது இருப்பதை உலகியலிற் காணலாம்; அது போல, இறை இயலில் அடியார்கள் போல நடிக்கின்ற என் செயல்கள் என் மனத்தோடு பொருந்தா திருக்கின்றன என்பார், ‘நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து’ என்றார். உண்மையன்பு இல்லையென்றபடி, ஆனால், அடியார் பெறும் உண்மையான பயனைமட்டும் விரும்புகின்றேன் என்பார். ‘வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்’ என்றார். எனினும், இறைவன் தம்மை உடையனாதலால், இறைவனையடைதற்குரிய அன்பையருளி நெஞ்சத்தை உருகச்செய்தல் அவன் கடமை என்பார், ‘நின்றுருகத் தந்தருள் எம் உடையானே’ என்றார். ஆடகம், நால்வகைப் பொன்னில் ஒன்று. உனக்கு என்றதிலுள்ள நான்கனுருபை ஏழனுருபாக மாற்றிப் பொருள் கொள்க.

இதனால், இறைவன்பாற்கொள்ளுகின்ற அன்பையும் அவனையே வேண்டிப் பெறுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

11

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமான்எம்
மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே.

பதப்பொருள் : யான் - நான், ஏதும் - ஒரு சிறிதும், பிறப்பு அஞ்சேன் - பிறத்தற்குப் பயப்படமாட்டேன்; இறப்பதனுக்கு - இறத்தலுக்கு, என் கடவேன் - யாதும் அஞ்சக் கடவேனல்லேன்; வானேயும் பெறில் வேண்டேன் - விண்ணுலகம் முழுதும் கொடுத்தாலும் அதனை விரும்பேன்; மண் ஆள்வான் - மண்ணுலகத்தையாள, மதித்தும் இரேன் - நெஞ்சத்தால் நினைத்துமிரேன்; தேன் ஏயும் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையைத் தரித்த, சிவனே - மங்கள் பொருளானவனே,