ஆதரவின்றி மிகவும் தனிமையான யான், வருந்துவன் - துன்புறுவேன்; அதுவன்றி, நான் ஆம் ஆறு - நான் செய்யவல்லது, மற்று என் - வேறு என்ன உண்டு? விளக்கம் : இறை வழிபாடு மூன்று வகை. புறவழிபாடு, அகப்புற வழிபாடு, அகவழிபாடு என்பன. உடலால் செய்வது புற வழிபாடு எனவும், உடலாலும் மனத்தாலும் செய்வது அகப்புற வழிபாடு எனவும், மனத்தால் மட்டும் செய்வது அகவழிபாடு எனவும் படும். இவற்றைச் சரியை கிரியை யோகம் எனச் சாத்திரம் கூறும். கையால் மலர் புனைதலும் நாவால் புகழ் பாடுதலும் புறவழிபாட்டின்பாற்படும். இவை இரண்டும் செய்யேன் என்பார். ‘நல் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பேற’ என்றார். ‘பூநாளும் தலை சுமப்பப் புகழ் நாமம் செவிகேட்ப, நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே’ என்னும் ஞானசம்பந்தர் திருவாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்விரண்டையும் செய்யேன்; ஆனால், இவற்றின் பயனாகிய திருவருளை மட்டும் பெற விழைகிறேன் என்பார், ‘அருளமுதம் புரியாயேல் வருந்துவன்’ என்றார். இறைவன் அருளினாலன்றித் திருவருள் கிட்டாது; உயிர் ஒன்றும் செய்ய வல்லது அன்று என்பதைக் காட்ட, ‘மற்றென்னே நான் ஆமாறே’ என்றார். இதனால், மலர் புனைதலும், ஏத்தலும் இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய சாதனங்கள் என்பது கூறப்பட்டது. 13 ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே. பதப்பொருள் : புத்தேளிர் கோமான் - தேவர்பிரானே, சதுராலே சார்வானே - திறமையான பணிக்கு ஆதரவளிப்பவனே, உன் திருவடிக்கே ஆம் ஆறு - என் திருவடிக்கே ஆளாம் வண்ணம், அகம் குழையேன் - மனம் நெகிழப்பெற்றேன், அன்பு உருகேன் - அன்பினாலே உருகமாட்டேன், பூமாலை புனைந்த ஏத்தேன் - மலர் மாலை தொடுத்துச் சார்த்தி வழிபட மாட்டேன், புகழ்ந்து உரையேன் - உன் புகழ்களை எடுத்துப் பேசமாட்டேன், நின் திருக்கோயில் - உனது திருக்கோயிலை, தூகேன் - அலகிடமாட்டேன், மெழுகேன் - சாணம் பூசிச் சுத்தப்படுத்தமாட்டேன், கூத்து ஆடேன் - ஆனந்தக் கூத்தாடேன், சாம்ஆறே - ஆனால் உயிர் விடுதற்கே, விரைகின்றேன் - துரிதப்படுகின்றேன். விளக்கம் : பொன்னை நெருப்பிலிட்டுக் காய்ச்சினால் முன்னர்க் குழையும்; பின்னர் உருகும். அதைப்போல், மனமாகிய
|