143


எவ்வாறு புகழவியலும் என்பார், ‘என் சொல்லி வாழ்த்துவேன்’ என்றார்.

இதனால், இறைவன் உலகத்தோடு அத்துவிதமாய்க் கலந்திருக்கும் நிலை கூறப்பட்டது.

15

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதுந் தாம்உயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே.

பதப்பொருள் : மதுகரம் - வண்டுகள், சூழ்த்து - மொய்த்து, முரலும் - ஒலிக்கின்ற, தாரோயை - கொன்றை மாலையை யணிந்த உன்னை, வானவர்கள் - தேவர்கள், வாழ்த்துவதும் - பல்லாண்டு கூறி வாழ்த்துவதும், தாம் வாழ்வான் - தாம் நீடூழி வாழ்தற்பொருட்டே, நின்பால் - உன்னிடத்தில், மனம் தாழ்த்துவதும் - உள்ளத்தைப் பணிவிப்பதும், தாம் உயர்ந்து - தாங்கள் மேன்மை அடைந்து, தம்மை - தங்களை, எல்லாம் - பிறர் எல்லாரும், தொழ வேண்டி - வழிபட விரும்பியே, நாயடியேன் யானும் - நாய் போன்ற அடியவனாகிய யானும், பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் - பயனற்ற பிறப்பினையொழித்திடுவதற்காக, உன்னைப் பரவுவன் - உன்னைத் துதிப்பேன்.

விளக்கம் : மது - தேன். கரம் - ஈட்டுதல். மதுவை ஈட்டலால் வண்டுக்கு மதுகரம் என்னும் பெயர் உண்டாயிற்று. தேவர்கள் இறைவனை வாழ்த்துவது தாம் வாழ்தற்காகவும், வணங்குவது தம்மைப் பிறர் வணங்கு வதற்காகவுமாதலால், பயன் கருதிய வாழ்த்தும் வணக்கமுமாயின. ஆனால், தாம் வாழ்த்து வது போகமும் புகழும் கருதியன்று; பிறவியறுதலை வேண்டியே வாழ்த்துகின்றாராதலால் ‘பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே’ என்றார்.

இதனால், ‘வேணடுங்கால் வேண்டும் பிறவாமை’ என்றமையால் பிறவாமை ஒன்றனையே இறைவன்பால் வேண்டா வேண்டுமென்பது கூறப்பட்டது.

16

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுடையா ளொருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேலுன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே.

பதப்பொருள் : அரியானே - யாரும் அறிதற்கு அரியவனே, இமையோர்கள் - தேவர்கள், பரவுவார் - வாழ்த்தி வணங்குவர்; நால் வேதம் - நான்கு வேதங்கள், பாடுவன - உன் புகழைப்