பாடுவன; குரவு - குரா மலரையணிந்த, வார் - நிண்ட, குழல் மடவாள் - கூந்தலையுடைய உமாதேவி, ஒரு பாகம் கூறு உடையாள் - ஒருபுறத்தைத் தனது கூறாகக் கொண்டுள்ளாள்; மெய்யன்பின் அடியார்கள் - உண்மையன்பினையுடைய அடியார்கள், மேல்மேல் - மேன்மேலும், விரவுவார் - இரண்டறக் கலந்து நிற்பார்கள்; (அவர் எல்லோரும்) அரவு - அராவிய, உன் வார் கழல் இணைகள் - உன் நீண்ட வீரக் கழலையணிந்த திருவடிகளை, காண்பாரோ - ஒருபடித்தாகக் காண்பார்களோ? (அல்லர்.) விளக்கம் : புகழ்தான் உரையும் பாட்டும் என இரு வகைப்படும். ‘இமையவர் இறைவனை உரையால் பாராட்டுவர்; வேதங்கள் பாட்டுகளாற் பாராட்டுவன’ என்பார், ‘பரவுவார் இமையோர்கள், பாடுவன நால்வேதம்’ என்று பிரித்துக் கூறினார். குரா - ஒரு வகை மரம். மடமை - இளமை. இறைவனை இமையோர் பரவியும், வேதம் பாடியும், உமாதேவி ஒன்றி யிருந்தும், அடியார் இரண்டறக் கலந்தும் காண்கின்ற நிலைகள் பலவாகும் என்பார் ‘கழலணைகள் காண்பாரோ’ என்றார். ‘ஒருபடித்தாக’ என்பது சொல்லெச்சம். கூறுடைய வரலாறு : பிருங்கி முனிவர் சிவபிரானை மாத்திரம் வலம் வருவதைக் கண்ட உமாதேவியார் தம் நாயகனை நோக்கி, ‘முனிவர் என்னை நோக்கி வலம் வராமைக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார். சிவபெருமான், ‘இஷ்டசித்தி பெற விரும்புவோர் உன்னை நோக்கி வலம் வருவர்; மோட்சத்தை விரும்புவோர் என்னை மட்டும் வலம் வருவர்’ என்றார். ‘இஷ்டசித்தியை விரும்பாது, மோட்சத்தை விரும்பியதால் பிருங்கி முனிவர் உன்னை வலம் வரவில்லை’ என்று கூறியதை உணர்ந்த தேவியார், இறைவனோடு பிரியா திருக்கப் பலகால் தவமிருந்து இறைவனது இடப்பாகத்தைப் பெற்றனர். இதனால், இறைவன் அளவிடற்கு அரியவனாகலின், அவனைக் காண்கின்ற நிலைகள் பலவாகும் என்பது கூறப்பட்டது. 17 அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ் விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன் தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே. பதப்பொருள் : யாவர்க்கும் அரியானே - எத்தகையார்க்கும் அறிதற் கரியவனே, அம்பரவா - ஞானவெளியில் விளங்குகின்றவனே, அம்பலத்து எம் பெரியோனே - தில்லையம்பலத்தில் பொதுவில் நின்று நடமாடும் எம் பெருமானே, சிறியேனை - சிறுமை மிக்க அடியேனை, ஆட்கொண்ட - ஆளாக்கிகொண்ட,
|