பதப்பொருள் : முதல் அந்தம் ஆயினானே - தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே, வினையிலே கிடந்தேனை - வினைப் பாசத்திலே அகப்பட்டுக் கிடந்த என்பால், புகுந்து நின்று - வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, போது - நீ வா, நான் வினைக்கேடன் - நான் வினையை ஒழிக்க வல்லேன், என்பாய் போல- என்று கூறுவாய் போல, நான் இனையன் என்று - நான் இத்தன்மையன் என்று, உன்னை அறிவித்து - உன்னியல்பை எனக்கு அறிவுறுத்தியருளி, என்னை ஆட்கொண்டு - என்னை அடிமை கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு - எமக்குத் தலைவனாய் நின்ற உன்பொருட்டு, இரும்பின் பாவை அனைய நான் - இரும்பினாற்செய்த பதுமை போன்ற நான், பாடேன் - பாட மாட்டேன்; நின்று ஆடேன் - நின்று கூத்தாட மாட்டேன்; அந்தோ - ஐயோ, அலறிடேன் - கதற மாட்டேன்; உலறிடேன் - ஏங்கி வற்ற மாட்டேன்; ஆவி சோரேன் - உயிர் தளர மாட்டேன்; முனைவனே - முதல்வனே, நான் ஆனவாறு - நான் இவ்வாறாய முறையின், முடிவு அறியேன் - முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; முறையோ - இது முறையாகுமோ? விளக்கம் : இருவினை ஒப்பு மலபரிபாகம் வந்த பக்குவர்களுக்கு இறைவன் தானே வந்து மெய்யுணர்வைத் தருவான் ஆகையால், அடிகளுக்கு அவ்வாறே வந்து அருள் செய்தான் என்பதை, "வினையிலே கிடந்தேனை" என்பது முதலிய பகுதிகளால் அறிகின்றோம். வினைக்கேடன் என்பதற்கு, வினையை யறுப்பவன் என்பது பொருள். இறைவன் தானே தன்னை அறிவித்தாலன்றி உயிர்கள் அவனை அறியமாட்டாவாகையால், ‘இனையன் நான் என்று உன்னை அறிவித்து’ என்றார். பாடுதல், ஆடுதல், உலறுதல், ஆவி சோர்தல் முதலியன தம் வயமிழந்து இறைவன் வயப்பட்டாரின் செயல்களாகும். இறைவன் தம் வினைகளை அறுத்து, தம்மை அறிவித்து ஆட்கொண்டபோது, இவை ஒன்றும் செய்யவில்லை என்பார், ‘முறையோ’ என்றும், இதனால் பின் யாது விளையுமோ என்பார், ‘முடிவறியேன்’ என்றும் கூறினார். ‘ஆல்’ இரண்டும் அசைகள். இதனால், இறைவன் தானே அறிவித்தாலன்றி இறைவனையறிய இயலாது என்பதும், அவ்வாறு அறிவிக்கப்பெற்றவர்கள் அவனது கருணையை நினைந்து உருக வேண்டும் என்பதும் கூறப்பட்டன. 22 ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்தியான் யாவரினங் கடைய னாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
|