151


பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசப்
போற்றிஎம் பெருமானே யென்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே.

பதப்பொருள் : மாசு அற்ற - குற்றமற்ற, மணிக்குன்றே - மாணிக்க மலையே, எந்தாய் - என் தந்தையே, தாம் பேசில் - தாம் பேசப்புகின், ஈசனே - தலைவனே, எந்தாய் - எங்கள் தந்தையே, எந்தை பெருமானே - எங்கள் தந்தைக்கும் தலைவனே, என்று என்றே பேசிப்பேசி - என்று பலகாற்பேசி, பூசின் - பூசப் புகின், திருநீறே - திருவெண்ணீற்றையே, நிறையப் பூசி - உடம்பு முழுதும் பூசி, எம்பெருமானே போற்றி என்று - 'எங்கள் தலைவனே, உனக்கு வணக்கம்!' என்று எப்பொழுதும் சொல்லி, பின்றா நேசத்தால் - பின்னிடாத அன்பினால், பிறப்பு இறப்பைக் கடந்தார்தம்மை - பிறப்பிறப்பைத் தாண்டினவர்களை, ஆண்டானே - ஆண்டருளினவனே, அவா வெள்ளம் - ஆசைக்கடலில் வீழ்கின்ற, கள்வனேனை - கள்வனாகிய என்னை, நீ ஆட்கொண்டவண்ணம் என்னை - நீ அடிமை கொண்ட தன்மை என்னை, அந்தோ - அதிசயம்!

விளக்கம் : மாணிக்கம் ஒளியுடையது; ஆனால், கழுவ வேண்டிய குற்றமுடையது. இறைவன் குற்றம் இல்லாத ஒளியுடையவன் என்பார், 'மாசற்ற மணிக்குன்றே' என விளித்தார். அடியார்கள் இறைவன் திருநாமங்களையே கூறுவார்கள். அவர்கள் மறந்தாலும் அவர்கள் நாக்கள் இறைவனை மறவா. நாவாகிய பொறி இறைவனை வாழ்த்தாவிடில் குணமில்லாது போகும் என்பதும் பொய்யாமொழியால் அறியப்படும் (தேவாரம்). ஆதலால், அடியார் பேசின் 'ஈசனேயெந்தா யெந்தை பெருமானே என்றென்றே பேசுவார்' என்றார். 'பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை வாயே வாழ்த்து கண்டாய்' என்று திருநாவுக்கரசர் வாய்க்குக் கட்டளையிடுகிறார்.

"பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கொடுப்பது நீறு."

ஆதலால், அடியார்கள் விரும்பிப் பூசுவது திருவெண்ணீறாகும், மேலும், திருநீற்றை உடம்பு முழுவதும் உத்தூளனமாகப் பூச வேண்டும் என்பார், 'பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசி' என்றார்.