கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளாதன வெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. பதப்பொருள் : ஆரும் கேட்டு அறியாதான் - யாவராலும் செவிகளால் கேட்டு அறியப்படாதவனும், கேடு ஒன்று இல்லான் - யாதோர் அழிவும் இல்லாதவனும், கிளையிலான் - உறவினர் இல்லாதவனும், கேளாதே எல்லாம் கேட்டான் - கருவி களினுதவியால் கேளாதே கேட்பனவற்றையெல்லாம் கேட்டவனும், நாட்டார்கள் விழித்திருப்ப - நாட்டிலுள்ளவர் ஏமாற்றத்தால் செயலற்றிருக்க, ஞாலத்துள்ளே - உலகத்தில், நாயினுக்குத் தவிசு இட்டு - யானைமேல் இடும் தவிசினை நாய்மேல் இடுவார் போன்று, நாயினேற்கு - நாயினேனுக்கு, காட்டாதன எல்லாங் காட்டி - காட்டவொண்ணாதவற்றையெல்லாங்காட்டி, பின்னும் - மேலும், கேளாதன எல்லாம் கேட்பித்து - கேட்காதன யாவையும் அறிவுறுத்தி, என்னை - அடியேனை, மீட்டேயும் பிறவாமல் - மீண்டும் பிறவாதபடி, காத்து ஆட்கொண்டான் - தடுத்தாண்டான், எம் பெருமான் செய்திட்ட விச்சை - இது எம்பெருமான் செய்த ஒரு வித்தையாம். விளக்கம் : இறைவன் தானே தன் வடிவமும் நிறமும் வண்ணமும் உணர்த்தினாலன்றி 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்' என்று பிறர்பால் கேட்டு அறியப்படாதவன் என்பார், 'கேட்டாரும் அறியாதான்' என்றார். தனக்கு ஒரு கேடு இல்லாதவனே பிறரது கேட்டினைத் தவிர்த்தல் கூடுமாதலின், 'கேடொன்றில்லான்' என்றார். இறைவன் பிறப்பில்லாதவன் என்பதை விளக்க, 'கிளையிலான்' என்றார்; 'தாயுமிலி தந்தையிலி தான்தனியன், காணேடி' என்று பின்னரும் கூறுவார். 'கேளாதே எல்லாங் கேட்டான்' என்பதற்குப் பிறர் கூறக் கேட்காது தானே அறிபவன் என்றும் பொருள் கூறலாம். தம்முடைய சிறுமையையும் இறைவனது பெருமையையும் காட்ட, நாய்க்குத் தவிசிடுதலைக் குறிப்பிட்டார். திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளி வந்து முப்பொருளுண்மைகளைத் தமக்கு விளக்கினமையைக் கூறுவார், 'காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னும் கேளாதன வெல்லாங் கேட்பித்து' என்றார்.
|