கடியாரோடு, மேவினோம் - கூடினோம்; மேன்மேலும் - மேலும் மேலும், குடைந்து ஆடி - (அவனது ஆனந்தக் கடலிலே) மூழ்கித் திளைத்து, ஆடுவோம் - கூத்தாடுவோம். விளக்கம் : தேவர் கோ அறியாமையினாலே இறைவன் 'தேவ தேவன்' ஆயினான். மும்மூர்த்திகளுக்கும் சத்தியைக் கொடுக்கின்றானாதலின், 'முதல்வன்' ஆயினான். எல்லாப் பொருள்களிலும் உள்ளீடாய் இறைவன் நிறைந்திருத்தலால், 'மூர்த்தி' என்றார். இறைவன் உலகத்தைத் தோற்றுவித்தவனாதலின், அவனே மூதாதையாயினான். உமையை ஒரு கூற்றில் கொண்டபோதுதான் இறைவன் உலகுயிர்களுக்கு அருளுகின்றானாதலின், 'மாதாளும் பாகத்தெந்தை - என்னையும் வந்தாண்டுகொண்டான்' என்று தம் அனுபவத்தைக் கூறினார். "அவன் எனை ஆட்கொண்டருளினன் காண்க. குவளைக் கண்ணி கூறன் காண்க" என்று முன்னும் கூறினார். யாவர்க்கும் தலைவனாயுள்ளவனிடம் ஆட்பட்டமையால், வேறு யாவர்க்கும் அடிமை செய்ய வேண்டுவதில்லை என்பார், 'யாமார்க்கும் குடியல்லோம்' என்றும், சர்வ வல்லமையுள்ளவனது துணையுள்ளமையால் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்பார், 'யாதும் அஞ்சோம்' என்றுங் கூறினார். 'நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்ற திருநாவுக்கரசர் வாக்கும் இங்கு நினைவுகூரத்தக்கது. அச்சம் நீங்கி அன்பு முகிழ்க்குங்கால் இன்பமே பெருகுமாதலின், 'மேன்மேலும் அவ்வின்பக் கடலில் குடைந்தாடியாடுவோம்' என்றார். இதனால், எல்லாம் வல்ல இறைவனுக்கு ஆட்பட்ட பின்னர் யாவர்க்கும் அடிமைப்பட வேண்டுவதில்லை என்பதும், எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்பதும், இன்பத்தில் திளைத்திருக்கலாம் என்பதும் கூறப்பட்டன. 30 4. ஆன்ம சுத்தி ஆன்ம சுத்தியாவது, உயிரினது தூய்மை. அஃதாவது, யான் எனது என்னும் அகப்புறப் பற்றுகள் நீங்கப்பெறுதல். ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே.
|