தளையைத் தொலைப்பவனும் ஆகிய இறைவனை, பிறிவு இலாத - விட்டு நீங்காமைக்கு ஏதுவாகிய, இன் அருள்கள் பெற்றிருந்தும் - இனிய அருளை அவன் தரப்பெற்றிருந்து, மாறாடுதி - மாறுபடுகின்றாய்; கிறி எல்லாம் மிக - பொய்ந்நெறிகள் மிகாநிற்க, என்னைக் கீழ்ப்படுத்தாய் - என்னைத் தாழ்வுபடுத்தினை; கெடும் ஆறு கெடுத்தாய் - யான் கெட்டுப்போகும் வண்ணம் கெடுத்தனை. விளக்கம் : அறிவை இறைவன் அளித்தாலன்றிப் பெற இயலாதாகையால், 'அறிவையருளி' என்றார். 'அது' பகுதிப் பொருள் விகுதி. இறைவன் காட்டிய நெறி மேல் நெறி, மெய்ந் நெறி. அந்நெறியே செல்லாமல் பொய்ந்நெறியே செல்ல மனம் ஒருமைப்படுகின்றமையால், 'மாறாடுதி பிண நெஞ்சே' என்று மனத்தை நோக்கி இரங்குகின்றார். அதனால் பொய்ந்நெறியிற் சென்றால் கேடும் இழிவும் உண்டாகுமாதலால் 'கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை,' என்றார். இதனால், ஞானம் பெற்ற பின்பும் அதன் வழியே ஒழுகா விடில் கேடும் இழிவும் உண்டாகும் என்பது கூறப்பட்டது. 32 மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம் மதியிலி மடநெஞ்சே தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல் நீறு நின்றது கண்டனை யாயினும் நெக்கிலை இக்காயம் கீறு கின்றலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே. பதப்பொருள் : எம் மதியிலி மடநெஞ்சே - எம் அறிவில்லாத பேதை மனமே, எனை மாறி நின்று - என்னைப் பகைத்து நின்று, கெடக்கிடந்த அனையை - கெடுமாறு கிடந்த அத்தன்மையை உடையாய், ஆதலால், உனை - உன்னை, இனி - இனி, சிக்கென - உறுதியாக, தேறுகின்றிலம் -நம்ப மாட்டோம்; சிவன் அவன் - சிவபெருமானாகிய அவனது, திரள் தோள்மேல் - திரண்ட தோள்களின்மேலே, நீறு நின்றது - திருவெண்ணீறு இருந்ததனை, கண்டனையாயினும் - நீ பார்த்த போதும், நெக்கிலை - கனிவடைந்து உருகவில்லை; இக்காயம் கீறுகின்றிலை - இந்த உடம்பைப் பிளக்கின்றிலை; உன் பரிசு - உன் தன்மை, கெடுவது - கெடுவதற்கு ஏதுவானது; இது கேட்கவும் கில்லேன் - இதைக் கேட்கவும் மாட்டேன். விளக்கம் : 'கிடந்த' என்பதில் உள்ளம் அகரம் தொகுத்தல். கிடந்தனையை என்பதற்குக் கிடந்தாலொத்தாய் எனவும் பொருள்
|