கொள்ளலாம். நன்மையைச் செய்ய வேண்டிய மனம், தீமையைச் செய்யும் போது அதை நம்புவதற்கு இல்லையென்பார், 'தேறுகின்றிலம்' என்றார். திருவெண்ணீறு உலக நிலையாமையையும் திருவருள் ஒளியையும் காட்டுவது. இறைவனது பெருமையும் காருணியமும் விளங்கும். அவை எண்ணியாவது மனம் இரங்க வேண்டும். அவ்வாறு இரங்கி உருகவில்லையென்பார், 'நெக்கிலை' என்றார். அதற்கு இடமாக உடம்பு அழிய வேண்டும். ஆதலால், அதைப் பிளக்க வேண்டும் என்பார், "இக்காயம் கீறுகின்றிலை' என்றார். 'கில்' ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல்; இது வினைச்சொல்லாயிற்று. இதனால், இறைவனது பெருமையையும் கருணையையும் எண்ணி மனம் உருக வேண்டும் என்பது கூறப்பட்டது. 33 கிற்ற வாமன மேகெடு வாய்உடை யானடி நாயேனை விற்றெ லாமிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாதம் முற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ உண்டன எல்லாம்முன் அற்ற வாறும்நின் அறிவும்நின் பெருமையும் அளவறுக் கில்லேனே. பதப்பொருள் : மனமே - மனமே, கிற்றவா - நீ செய்தவாறு நன்று; கெடுவாய் - நீ கெட்டொழிவாய்; உடையான் - எல்லாவற்றையும் உடையவனும், அடி நாயேனை - அடிமையாகிய நாயேனை, விற்று - விலைப்படுத்தி, எலாம் - எல்லா வகையானும், மிக ஆள்வதற்கு - மிகுதியும் ஆண்டருள்வதற்கு, உரியவன் - உரிமையுடையவனும் ஆகிய இறைவனது, விரைமலர் - மணந்தங்கிய தாமரை மலர் போன்ற, திருப்பாதம் - திருவடியாகிய, முற்றிலா இளந்தளிர் - முதிராத இளந்தளிரை, பிரிந்து இருந்தும் - நீங்கியிருந்தும், நீ உண்டன எல்லாம் - நீ அனுபவித்தன யாவும், முன் அற்ற ஆறும் - முன்பே துன்பமாய் அற்றொழிந்தவாற்றையும், நின் அறிவும் - உன் அறிவையும், நின் பெருமையும் - உன் பெருமையையும், அளவு அறுக்கில்லேன் - அளவை வரையறை செய்யும் ஆற்றலுடையவன் அல்லேன். விளக்கம் : 'கில் + தவா' எனப் பிரித்து, புலன்களில் ஓடுகின்ற ஆற்றல் கெடாத என்றும், 'கிற்று + அவா' எனப் பிரிந்து, வேண்டுகிற்று எல்லாம் அவாவுகின்ற என்றும் பொருள் கொள்ளலாம். இறைவன் தம்மை உடைமையாகக் கொண்டமையால் விற்பதற்கு உரிமையுடையவன் என்பதைக் காட்ட, 'உடையானடி நாயேனை விற்றெலாமிக ஆள்வதற்குரியவன்'
|