என்றார். "இருந்தென்னை ஆண்டுகொள், விற்றுக்கொள் ஒற்றி வை" என்று நீத்தல் விண்ணப்பத்தில் அடிகள் பின்னரும் கூறுகிறார். இறைவன் திருவடிக் காட்சி ஐம்பொறிகளுக்கும் ஒருசேர இன்பத்தைக் கொடுக்கிறது. 'விரை மலர்த் திருப்பாத முற்றிலா இருந்தளிர்' என்றதனால், தளிர் மெய்யினுக்கும், மலரிலுள்ள தேன் நாவிற்கும், மலர் கண்ணுக்கும், மலரிலுள்ள மணம் மூக்கிற்கும், மலரிலுள்ள வண்டின் ஒலி செவிக்கும் இன்பத்தைத் தருவனவாதல் காண்க. 'இவ்வாறிருந்தும், இதனை விடுத்து உலக விஷயங்களை நுகரத் தலைப்பட்டுக் கெடுகிறாயே!' என்று வருந்தி, 'நின் அறிவும் பெருமையும் போனவாறு என்னே!' என்று இரங்குவார்,' பிரிந்திருந்தும் நீ உண்டன எல்லாம் முன் அற்றவாறும் நின் பெருமையும் அளவறுக்கில்லேன்,' என்றார். அளவறுக்கில்லேன் என்பது 'அளவறுக்கில்லேன்' என்றாயிற்று; தொகுத்தல் விகாரம். இதனால், உலக போகங்கள் துன்பத்தைத் தரும் என்பதும் சிவபோகம் இன்பத்தைத் தரும் என்பதும் கூறப்பட்டன. 34 அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்நம் களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும் உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்ததும் இலைநெஞ்சே பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே. பதப்பொருள் : நெஞ்சே - மனமே, இமையவர்க்கு - தேவர்களுக்கு, அளவறுப்பதற்கு - அளந்து முடிவு செய்தற்கு, அரியவன் - அருமையானவன், அடியவர்க்கு எளியான் - அடியார்களுக்கு எளிமையானவன், நம் களவு அறுத்து நின்று - அவன் நம்முடைய வஞ்சத்தையொழித்து நின்று, ஆண்டமை - ஆண்டருளின தன்மையை, கருத்தினுள் - எண்ணத்திலே, கசிந்து உணர்ந்திருந்தேயும் - உருகி உணர்ந்திருந்த போதும், பரகதி புகுவான் - வீட்டு நிலையை அடைதற்பொருட்டு, உள - உனக்கு உள்ளனவாகிய குற்றங்களை, கறுத்து - கோபித்து, உனை நினைந்து - உன்னுடைய நிலைமை கருதி, உளம் - உள்ளத்தை, பெருங்களன் செய்ததும் இல்லை - அவன் தங்குதற்குரிய பெரிய இடமாகச் செய்ததும் இல்லை, பளகு அறுத்து - பொய்யை நீக்கி, உடையான் கழல் - உடையானது திருவடியை, பணிந்திலை - வணங்கினாயில்லை.
|