விளக்கம் : இறைவனுக்கு உரிமையான உயிரைத் தனித்து நிற்பது என்று எண்ணுவதும், இறைவனது உடைமையை எனது என்று எண்ணுவதும் களவு, இறைவன் இந்நிலையை நீக்கித் தம்மையாட்கொண்டமையால் 'களவறுத்து நின்றாண்ட' என்றார். 'புகுவான்' என்பது வினை எச்சம்; புகும்பொருட்டு என்னும் பொருளது. காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பன மனக்குற்றங்களாம். இக்குற்றங்களைக் கடிய வேண்டும் என்பார், 'பளகறுத்து' என்றார். உள்ளம் இறைவன் தங்குதற்குரிய இடம் என்று எண்ணி அவனிருக்கும் கோயில் ஆக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்பார், 'உனை நினைந்து உளம் பெருங்களன் செய்ததும் இலை' என்றார். 'உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்' என்றார் திருமூலர். உள்ளத்தைப் பெருங்களன் செய்து வழிபடுவது அகவழிபாடு. இனி, புறத்தேயும் வழிபாடு செய்ய வேண்டும் என்பார், 'உடையான் கழல் பணிந்திலை' என்றார். கழல் பணிதல் புற வழிபாடு. இதனால், இறைவன் செய்த பேருதவியை நினைந்து, உள்ளத்தை அவன் தங்குதற்குரிய இடமாக அமைத்து வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது. 35 புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தைஎம் பிரான்எனை யாண்டவன் கழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. பதப்பொருள் : புகுவதாவதும் - சென்று அடைதற்கு உரியதும், போதரவில்லதும் - சென்றால் மீளுதலில்லாததும் ஆகிய, பொன்னகர் - சிவலோகம், புகப்போற்கு - புகுதற்பொருட்டுச் செல்லுவதற்கு, உகுவதாவதும் - தடையான பற்றுக் கழல்வதும், எந்தை - எம் தந்தையும், எம்பிரான் - எம் தலைவனும், எனை ஆண்டவன் - என்னையாண்டருளினவனும் ஆகிய இறைவனது, கழற்கு - திருவடிக்கு, அன்பு நெகுவதாவதும் - அன்பினால் நெஞ்சம் உருகுதலும், நித்தலும் - நாள்தோறும், அமுதொடு - அமுதத்துடன், தேனொடு பால் கட்டி - தேன் பால் கற்கண்டினும், மிகுவதாவதும் - மேற்பட்ட பேரின்பம் விளைவதும், இன்று எனின் - இல்லையாயின், இதற்கு - இதற்கு, வினையேன் - தீவினையுடையேன், என் செய்கேன் - யாது செய்ய வல்லேன்?
|