உலகத்தில் தலைவனைப் பிரிதலுற்றார் தலையை மோதிக் கொள்ளுவதையும், மண்டையை உடைத்துக்கொள்வதையும் காண்கிறோம்; இறைவனாகிய தலைவனைப் பிரிதலுற்றார் இச்செயல்களை மிகவும் செய்ய வேண்டும் அன்றோ! அவ்வாறு செய்யவில்லையே என்பார், 'பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன்' என்றார். கருத்துப் பண்பட வேண்டும். அதன் பிறகே அன்பை மனம் ஏற்றுக்கொள்ளும்; கருத்தும் பண்படவில்லை, அதனால், மனமும் உருகவில்லை என்பார், 'பாவனை இரும்பு; கல்மனம்' என்றார். கருத்து, மனம் இவற்றைக்காட்டிலும் செவி மிகவும் வன்மையுடையதாய் இருக்கின்றது என்பதற்கு, 'செவி இன்னதென்று அறியேன்' என்றார். செவி முதலிய பொறிகளும், மனம் முதலிய அந்தக்கரணங்களும் தம்மோடு ஒத்துழைக்கவில்லை என்று வருந்துகிறார் அடிகள். இதனால், இறைவன் ஆட்கொண்ட பின்னர்ப் பிரிந்து வாழ்வது பெருந்துன்பமானது என்பது கூறப்பட்டது. 37 ஏனை யாவரு மெய்திட லுற்றமற் றின்னதென் றறியாத தேனை ஆனெயைக் கரும்பினின் தேறலைச் சிவனைஎன் சிவலோகக் கோனை மானன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேன்உயி ரோயாதே. பதப்பொருள் : ஏனை யாவரும் - (மெய்யன்பரல்லாத) மற்றையோர் எல்லாரும், எய்திடல் உற்று - அடைய முயன்றும், இன்னது என்று அறியாத - இத்தன்மையது என்று அறியப்படாத, தேனை - தேன்போல்வானும், ஆன் நெயை - பசுவின் நெய் போல்வானும், கரும்பின் இன் தேறலை - கரும்பின் இனிமையான சாறு போல்வானும், சிவனை - சிவனும், என் - எனது, சிவலோகக் கோனை - சிவலோகத்தரனும், மான் அன - பெண் மானின் நோக்கம் போன்ற, நோக்கிதன் - திரு நோக்கத்தை யுடையவளாகிய உமாதேவியின், கூறனை - ஒருபாகத்தை உடையவனும் ஆகிய இறைவனை, குறுகிலேன் - அணுகிலேன், யான் இருந்து நெடுங்காலம் - நீண்ட நாள்கள் இருந்து, ஊனை - உடம்பை, ஓம்புகின்றேன் - வளர்க்கின்றேன், கெடுவேன் - கெடுவேனாகிய எனது, உயிர் ஓயாதே - பிராணன் ஒழியவில்லையே! விளக்கம் : பிரமன் இந்திரன் முதலாய தேவரை, 'ஏனையாவரும்' என்றார். தேன் நெய் கருப்பஞ்சாறு இன்பம் தரும் பொருள்கள். ஆதலால், 'தேனை ஆனெயைக் கரும்பினின் றேறலை' என்று உருவகித்தார். ஆனால், இவை உடற்கு இன்பம் தருவன; இறைவன் உயிர்க்கு இன்பம் தருபவன். ஆதலால்,
|