சிவன் என்றார். சிவன் என்றது இன்பத்துக்குக் காரணன் என்னும் பொருளது. அவன் உள்ள இடம் இது என்பார், 'சிவலோகக் கோன்' என்றார். எனினும், உலகுயிர்களுக்கு அருள் செய்பவன் என்பதைக் காட்ட, 'மானன நோக்கி தன் கூறனை' என்றார். மாதொரு கூறுடைய உருவம் அருள் திருமேனியாகும். இன்பமாய், இன்பத்திற்குக் காரணமாய், இன்ப வடிவினனாய் உள்ள பெருமானை அடைந்து இன்பம் பெறாமல் வாழ்கின்றேன் என்பார், 'குறுகிலே னெடுங்காலம் ஊனையானிருந் தோம்புகின்றேன்' என்றார். உயிர் போக வேண்டும் என்று விரும்புவார், 'கெடுவேன் உயிர் ஓயாதே' என்றார். இதனால், சிவபோகத்தை விரும்புவார் உலக இன்பத்தை விரும்பமாட்டார் என்பது கூறப்பட்டது. 38 ஓய்வி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலாத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இனனருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே? பதப்பொருள் : ஓய்வு இலாதன - அழியாதனவும், உவமனில் இறந்தன - உவமைப்பொருள்களின் மேம்பட்டனவும் ஆகிய, ஒள் - ஒளி பொருந்திய, மலர் - தாமரை மலர் போன்ற, தாள் - திருவடிகளை, தந்து - கொடுத்து, நாயில் ஆகிய குலத்தினும் - நாய்ச் சாதியினும், கடைப்படும் - கடையாகின்ற, என்னை - அடியேனுக்கு, நல்நெறி காட்டி - முத்தி நெறி காட்டி, தாயில் ஆகிய - தாய் போன்ற, இன் அருள் புரிந்த - இனிய அருளைச் செய்த, என் தலைவனை நனி காணேன் - என் இறைவனை மிகவும் காண்கிலேன்; ஆயினும், தீயில் வீழ்கிலேன் - நெருப்பில் வீழ்ந்து இறக்க மாட்டேன்; திண் வரை உருள்கிலேன் - வலிய மலையினின்றும் விழுந்து உயிர் விடேன்; செழுங்கடல் புகுவேனே - வளமிக்க கடலிற்பாய்வேனோ? அதுவுஞ்செய்யேன். விளக்கம் : இறைவன் இடைவிடாது திருக்கூத்து இயற்று கின்றானாதலின், ஓய்விலாதன என்றதற்கு ஓய்வு இல்லாத என்ற பொருளும் கொள்ளலாம். நாய், செய்ந்நன்றியறியும் குணமுடையது. தம்மிடம் அக்குணம் இல்லையென்பார், 'நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும்' என்றார். குழந்தை தீயன செய்த வழியும் தந்தை போலாது இரக்கமே காட்டுவாள் தாய். அதைப் போலத் தாம் செய்ந்நன்றி மறந்து பிழை செய்த போதும் இறைவன் அருள் புரிந்தானாதலின், 'தாயிலாகிய இன்னருள்
|