169


பார்க்கப்பட்டோரும் கலங்குவர். அதனால் 'மத்திடு தயிராகி' என்றார். கடையப்பட்ட தயிரிலிருந்து பெறப்படும் வெண்ணெயைக் கடைந்தோர் கொள்வர்; தயிருக்குப் பயனில்லை. கலக்கப்பட்ட காமுகரிடமிருந்து பெறப்படும் பொருளை, பார்த்த பெண்கள் கொள்வர்; காமுகருக்குப் பயனில்லை என்ற உவமை நயமும் காண்க.

திருவருள், தேன் போன்று தித்திக்குமாதலின், 'தேனிலாவிய திருவருள்' என்றார். உயிரைப் பேண வேண்டிய காரியங்களை விடுத்து உடலைப் பேண வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றேன் என்று வருந்துவார், 'உண்டுடுத் திருந்தேனே' என்றார்.

இதனால், உலக போகங்களைத் துய்ப்பதற்கான செயல்களை விடுத்த உயிருக்கு உறுதி தரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.

40

5. கைம்மாறு கொடுத்தல்

உதவி செய்தவர்க்குத் திரும்ப உதவி செய்தல் கைம்மாறு கொடுத்தலாகும்.

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

பதப்பொருள் : வான் உளோர்க்கு - தேவர்களுக்கெல்லாம், ஒருவனே - தலைவனாகிய ஒருவனே, யான் - நான், இருகை யானையை ஒத்திருந்து - இரண்டு கைகளையுடைய யானையை நிகர்த்து இருந்து, என் உளக் கருவை - மனத்திலுள்ள மூலப் பொருளாகிய தலைவனை, கண்டிலேன் - பார்த்திலேன்; கண்டது - பார்த்தது, எவ்வமே - துன்பத்தையே; என் நிலை இங்ஙனமிருந்தும், வருக என்று பணித்தனை - வா என்று நீ கட்டளையிட்டாய், கிற்றிலேன் - உன்னை அனுபவிக்க வலியில்லேன்; உண்ணவே கிற்பன் - உலக போகங்களை அனுபவிக்கவே வலியுள்ளேன்.

விளக்கம் : கையின் பயன் பிறருக்குக் கொடுத்தல்; யானை பெரிதாகிய கையை உடையதாய் இருந்தும் பிறருக்கு உபகாரமாகவோ பிரதி உபகாரமாகவோ கொடுக்கும் தன்மை இல்லா திருக்கின்றது. அது போலவே நானும் இருக்கின்றேன் என்பதைக் குறிக்க' 'இருகை யானையை ஒத்திருந்து' என்றார். 'யானைக்கில்லை தானமும் தருமமும்' என்ற நறுந்தொகையைக் காண்க. அறிவில்லாத மனிதனை 'இருகால் மாடே' என அழைப்பது உலக